இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் கொரோனா தொற்றுப் பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ஒருவர் வாரத்தில் மூன்று நாட்கள் தெரு நாய்களுக்கு பிரியாணி சமைத்து கொடுத்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்நாத். இவருக்கு நாய்கள் என்றால் அவ்வளவு பிரியம். ஊரடங்கு காலத்தில் தெருக்களில் இருக்கும் நாய்களுக்கு யார் உணவு அளிப்பார்கள் என்ற கேள்வி இவருக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த நாய்களுக்கு தாமே சமைத்து உணவு கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளார். 






அதன்படி வாரத்தில் மூன்று நாட்கள் ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாய்களுக்கு உணவு அளிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நாட்களில் சுமார் 30-40 கிலோ வரை பிரியாணி உணவை தயாரித்துள்ளார். அந்தப் பிரியாணியை சுமார் 190 தெரு நாய்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு வழங்கி வருகிறார். இது தொடர்பாக அவர் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நான் தற்போது 190 நாய்களுக்கு உணவு அளித்து வருகிறேன். இவை அனைத்தும் என்னுடைய குழந்தைகள் போல் ஆகிவிட்டன. என்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்தச் செயலை நான் தொடர்வேன்" எனத் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் இவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவருடைய செயலை சமூக வலைதளங்களிலும் பலர் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.