கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் மே மாதம் தொடங்கியது. குறிப்பாக 18-44 வயதினருக்கான இலவச தடுப்பூசி செலுத்தும் பணி இந்த மூன்றாம் கட்டத்தில் தொடங்கப்படுவதாக அறிவிக்கபட்டது. பணிகள் பெயரளவில்தான் தொடங்கியதே தவிர முதல் கோணல் முற்றிலும் கோணல் என்னும் கதையாக தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாத காரணத்தால் 18 -44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.


மீண்டும் தற்போது 20 மே அன்றிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்களின்படி இந்த ஐந்து நாட்களில் மட்டும் 18-44 வயதினருள் ஒரு கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா 19 கோடி கோவிஷீல்ட் -கோவாக்சின் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளதாக அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதுதான், ஆனால் அதுதான் உண்மை நிலவரமா? அல்லது இந்த எண்ணிக்கை வெறும் கண் துடைப்பா?

இன்றைய தேதியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மட்டும்
1.80 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் டெல்லி தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஒட்டுமொத்தமாகவே 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணியை நிறுத்திவைத்துள்ளது.பஞ்சாப் மத்திய அரசை நம்பியிருக்க முடியாது என நேரடியாகவே மாடர்னா தடுப்பூசியைக் கொள்முதல் செய்யக் களமிறங்கியது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை கடலூர், சென்னை என பல்வேறு மாவட்டங்களில் 18-44 வயதினருக்கு தடுப்பூசியே கிடைக்கப்பெறவில்லை.






திருச்சியில் இன்றைக்கு மட்டுமே கடைசியாக தடுப்பூசிக்கு புக் செய்யப்பட்டுள்ளது. பெருநகரம் கோவையில் நாட்டாம்பாளையம் என்னும் ஒரு இடத்தில் மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் அங்கும் இன்று மட்டுமே கடைசி. மதுரையில் ஒட்டுமொத்தமாகவே தடுப்பூசி கிடைக்கப்பெறவில்லை. அண்டை மாநிலமான கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி எனப் பல்வேறு மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி மையங்களே இல்லை. கர்நாடகா தனது மெட்ரோ நகரமான பெங்களூருவில் மட்டும் இன்றைய ஒருநாளைக்கான தடுப்பூசிகளை வைத்துக்கொண்டு தத்தளித்துக்கொண்டிருக்கிறது.இப்படியிருக்க, எங்கே போனது 1.80 கோடி தடுப்பூசிகள், கடந்த ஐந்து நாட்களில் யாருக்குப் போடப்பட்டது ஒரு கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் என்கிற கேள்வி எழுகிறது.



நாளொன்றுக்கு 2.7 மில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் நாளொன்றுக்கு மக்களிடம் சென்று சேர்ந்த தடுப்பூசி எண்ணிக்கை என்னவோ வெறும் 1.62 மில்லியன் மட்டும்தான்.


இத்தனைக்கும் சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 70 மில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் மாதமொன்றுக்கு 10 மில்லியன் கோவாக்சின்களை உற்பத்தி செய்கிறது.இதை இன்னும் அதிகரிக்கும் விதமாக ஹைதராபாத் மற்றும் மும்பையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களிலும் கோவாக்சின் உற்பத்திக்கான முதலீட்டில் அரசு களமிறங்க உள்ளது.





அதாவது நாளொன்றுக்கு 2.7 மில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் நாளொன்றுக்கு மக்களிடம் சென்று சேர்ந்த தடுப்பூசி எண்ணிக்கை என்னவோ வெறும் 1.62 மில்லியன் மட்டும்தான். அப்படியென்றால் எங்கே காணாமல் போகிறது மீதமுள்ள தடுப்பூசிகள்? இவ்வளவு தடுப்பூசிகள் தயாரித்தும் மாநிலங்களில் நிலவும் தொடர் தட்டுப்பாடுக்குக் காரணம் என்ன? இத்தனைக்கும் இந்தியா தற்காலிகமாக எந்த நாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதி செய்யவில்லை. அப்படியென்றால் எங்கே தவறுகிறது அரசு?




மத்திய பட்ஜெட்டில் 35000 கோடி ஒதுக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான அந்த 3000 கோடியை ஒதுக்கியிருந்தால் இந்நேரம் நமது கையிருப்பாக 200 கோடி டோஸ்கள் இருந்திருக்கும்


‘கோவிஷீல்ட் உற்பத்தியை அதிகரிக்க அவர்கள் கேட்ட முன்பணத்தைத் தரவில்லை.தடுப்பூசிகளுக்கான சர்வதேசத் டெண்டர் எதையுமே மத்திய அரசு அறிவிக்கவில்லை’என இதற்கான பல்வேறு காரணங்களை அடுக்குகிறார் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன். அவர் கூறுகையில், ‘சீரம் இன்ஸ்ட்டியூட்டின் ஆதார் பூனாவாலா லண்டன் செல்வதற்கு முன்பு கோவீஷீல்ட் உற்பத்தியை அதிகரிக்க கட்டுமானங்களை உருவாக்குவதற்காக அரசிடம் 3000 கோடி ரூபாய் முன்பணம் கேட்டிருந்தார்.அது இன்னும் தரப்பட்டதாகத் தெரியவில்லை.கோவாக்சின் உற்பத்தியும் மிகச்சிறிய அளவில்தான் உள்ளது.அதனால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. புதிய தடுப்பூசிக் கொள்கையின்படி மாநிலங்களே தடுப்பூசி கொள்முதலைப் பார்த்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தட்டிக்கழித்ததும் பஞ்சாப் நேரடியாக மடோர்னா, ஃபைசர் தடுப்பூசிக் கொள்முதலுக்கு தொடர்புடைய நிறுவனங்களை அணுகியது. ஆனால் இரண்டு நிறுவனங்களுமே பஞ்சாப்புக்குத் தடுப்பூசி கொள்முதல் செய்ய மறுத்துவிட்டது. காரணம், தடுப்பூசியால் ஏற்படும் சேதம் அல்லது இழப்புக்கு எதிரான காப்பில் (Indemnity)மத்திய அரசு கையெழுத்திட்டாலே ஒழிய பெருநிறுவனங்கள் மாநிலங்களுக்குத் தடுப்பூசியை அளிக்காது. நமது மத்திய அரசு அதில் கையெழுத்திடவில்லை. ஜனவரியிலேயே மத்திய அரசு சர்வதேச டெண்டரை அறிவித்திருந்தால் மாநிலங்களுக்கு இந்தச் சிக்கலே ஏற்பட்டிருக்காது.சர்வதேச நாடுகள் ஏப்ரல் 2022 வரை தங்களுக்கான தடுப்பூசி தேவைகளுக்கு முன்னரே இந்த நிறுவனங்களை அணுகிவிட்டதால் இனிமேல் நாம் சர்வதேசத் டெண்டர் அறிவிக்கவும் சாத்தியமில்லை. அதனால் தடுப்பூசி உள்நாட்டு உற்பத்தி மட்டுமே நமது கையில் இருக்கும் ஒரே நம்பிக்கை. ஆனால் மத்திய பட்ஜெட்டில் 35000 கோடி ஒதுக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான அந்த 3000 கோடியை ஒதுக்கியிருந்தால் இந்நேரம் நமது கையிருப்பாக 200 கோடி டோஸ்கள் இருந்திருக்கும். தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசுதான் செய்யவேண்டும் அதுவும் வீடுவீடாகச் சென்று செய்யவேண்டும்.இது மட்டுமே தொற்றுப்பரவலுக்கான ஒரே தீர்வு.மாநிலங்களிடம் இந்த பொறுப்பைத் தட்டிக்கழிப்பது தீர்வாகாது’ என்கிறார்.