சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் கடந்த சனிக்கிழமை மேற்கொண்டனர்.
அப்போது, மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், பாதுகாப்பு படையைச் சேர்ந்த பல வீரர்களையும் காணவில்லை. அவர்கள் காட்டிற்குள் வழிதவறி விட்டனரா? அல்லது மாவோயிஸ்டுகளிடம் சிக்கியுள்ளனரா? என்று அவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
22 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது தேர்தல் பரப்புரையை ரத்து செய்துவிட்டு, உடனடியாக டெல்லி திரும்பினார். பின்னர், உயர் அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்தினர். மேலும், 22 வீரர்களின் உயிர்த்தியாகத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதிபட கூறினார்.
இந்த நிலையில், தாக்குதல் நடைபெற்ற சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்கிறார். அந்த மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஜக்தால்பூர் விமான நிலையத்திற்கு காலை 10.35 மணிக்கு சென்றடைகிறார். பின்னர், துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த வீரர்களின் சடலங்களுக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர், காயம் அடைந்த வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு, அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.