ராஜஸ்தானில் தனக்கு குழந்தை திருமணம் செய்யப்படுவதை எதிர்த்து சிறுமி ஒருவர் நீதிமன்றத்தை அணுகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் நாளுக்கு நாள் சமூகத்தில் கல்வி,வேலை வாய்ப்பு போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், இன்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள், குழந்தை திருமணம், ஆணவப் படுகொலைகள், கல்வி வாய்ப்பு மறுப்பு போன்ற பல குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றது. பொதுவாக நம் ஊரில் ஒரு கருத்தை முன்வைப்பார்கள். அதாவது “பொம்பளை புள்ள படிச்சி என்ன பண்ணப்போகுது..காலா காலத்துல கல்யாணம் பண்ணிவைங்கன்னு”. இது இந்தியாவில் வாழும் அனைத்து மொழி மக்களுக்கும் பொருந்தும்.
என்னதான் அரசு குழந்தை திருமணம் தடை சட்டம், பெண்களின் திருமண வயது நிர்ணயம் போன்ற சட்டங்களை இயற்றினாலும் அதனை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இதில் குழந்தை திருமணம் வடமாநிலங்களில் சகஜமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் தனக்கு குழந்தை திருமணம் செய்யப்படுவதை எதிர்த்து சிறுமி ஒருவர் நீதிமன்றத்தை தைரியமாக அணுகியிருக்கிறார்.
அங்குள்ள ஜோத்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றில் வாழும் அச்சிறுமி தனது மனுவில் தான் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு திருமண வயது வராத நிலையில் சிறுவயதில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவருடன் சேர்ந்து வாழ தனது பெற்றோர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், இது சட்டவிரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் ஜூலை 6 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளதால் தற்போது அவர்களுடன் சொந்த கிராமத்திற்கு சென்றால், தன்னை வீட்டுச் சிறையில் வைப்பார்கள் எனவும் அச்சிறுமி அச்சம் தெரிவித்துள்ளார். இதனால் எனது படிப்பு பாதிக்கப்படலாம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி தினேஷ் மேத்தா, தனது வாழ்க்கை சுதந்திரத்தில் குடும்பத்தினர் தலையிடலாம் என்ற சிறுமியின் அச்ச உணர்வை புரிந்து கொண்டு ஜோத்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக கடிதம் ஒன்றை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
ஒருவேளை அப்பெண்ணின் புகாரில் உண்மை தன்மை இருப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளருக்கு நீதிபதி தினேஷ் மேத்தா அறிவுறுத்தியுள்ளார். குழந்தை திருமணத்தை எதிர்த்து தைரியமாக நீதிமன்றம் சென்ற அச்சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்