டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பிகினி உடை அணிந்து வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


சமீப காலமாக பொது இடங்களில் மக்களுக்கு தொல்லை ஏற்படும் வண்ணம் செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இது தண்டனைக்குரிய குற்றம் என தெரியாமல் ரீல்ஸ் எடுப்பது, ஊடலில் திளைப்பது என செயல்களில் ஈடுபட்டு வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். பிறகு தான் செய்தது தவறு என சொல்லி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடுகிறார்கள். காவல்துறை தரப்பில் எவ்வளவோ எச்சரிக்கை விடுத்தும் பொதுஇடங்களில் ஆபாசமாகவும், அத்துமீறல்களிலும், எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. 


இது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அங்குள்ள மெட்ரோ ரயில்களில் சர்வ சாதாரணமாக பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவது, கவர்ச்சியான உடை அணிவது, ரீல்ஸ் எடுப்பது, ஆபாசமான செயல்களை செய்வது என நாளுக்கு நாள் இந்த பிரச்சினை அதிகரித்து வருகிறது. உடனடியாக மெட்ரோ நிர்வாகம், காவல்துறை  தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






இப்படியான நிலையில் மீண்டும் டெல்லியில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இம்முறை ஓடும் பேருந்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. அந்த பேருந்தில் பெண் ஒருவர் பிகினி உடை அணிந்து ஏறுகிறார். அவரை பார்த்ததும் பேருந்தில் பயணித்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். என்ன நடக்கிறது என சிலருக்கு புரியவில்லை. உள்ளே ஏறும் அப்பெண் இன்னொரு பெண்ணிடம் ஏதோ பேசுகிறார். அந்த பெண்ணுக்கு எதிரே அமர்ந்திருந்த நபரிடம் ஏதோ செய்கை செய்கிறார். அந்த நபர்  தப்பித்தால் போதும் என அங்கிருந்து நகர்கிறார். இப்படியான காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. 


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அப்பெண்ணின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர். டெல்லியில் மெட்ரோ ரயில்களுக்கு அடுத்ததாக மாநில அரசு பேருந்துகள் முக்கியமான போக்குவரத்து சாதனமாக விளங்குகிறது. 


அதிக எண்ணிக்கையிலான இளம் வயதினர் பயணிக்கும் பேருந்தில் இப்படி ஒரு பெண் நடந்துக்கொள்வது சரியா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.