மும்பையை அடுத்த அந்தேரி பகுதியில் போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் பெற்றோர்களே இரண்டு குழந்தைகளை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


என்ன நடந்தது..? 


மும்பையை அடுத்த அந்தேரி பகுதியை சேர்ந்த ரூபினா கான் என்ற பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது சகோதரன் ஷபீர்கான், அவரது மனைவி சானியா இருவரும் போதைப்பொருள் வாங்குவதற்காக தங்களது இரண்டு வயது ஆண் குழந்தை மற்றும் பிறந்து ஒரே மாதம் ஆண பெண் குழந்தை என இருவரையும் மொத்தமாக ரூ. 74 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர். 


இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரூபினா கான் அந்தேரி காவல் நிலையத்திற்கு சென்று தனது சகோதரன் மற்றும் அவரது மனைவி மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், குழந்தைகளின் பெற்றோர்களான ஷபீர்கான் -  சானியா ஆகிய இருவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை விற்க உதவி செய்த ஏஜெண்ட் உஷா ரத்தோரையும், குழந்தையை காசு கொடுத்து வாங்கிய ஷகீல் மக்ரானியையும் தட்டி தூக்கினர். 


மேலும், மும்பை அந்தேரி பகுதியில் இருந்து ஒரு மாத பெண் குழந்தையை மீட்ட நிலையில், இரண்டு வயது மகனை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.


இதுகுறித்து மும்பை குற்றப் பிரிவு தயா நாயக் தெரிவிக்கையில், “போதைக்கு அடிமையான தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளை விற்று பணம் சம்பாதிக்க அந்தேரியில் முயன்றுள்ளனர். சம்பவம் குறித்து தம்பதியின் குடும்பத்தினர் அறிந்தவுடன், இது வெளிச்சத்திற்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் மற்றும் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் பையனை அறுபதாயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை பதினான்காயிரம் ரூபாய்க்கும் விற்றனர்” என்று தெரிவித்தார். 


தொடர்ந்து இதுகுறித்து பேசிய ஒரு அதிகாரி, “போதைப்பொருள் இல்லாமல் குழந்தையை விற்ற பெற்றோர்களால் இருக்க முடியவில்லை. அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பெண் ரத்தோட் அவர்களை தொடர்பு கொண்டு குழந்தையை விற்க ஏற்பாடு செய்துள்ளார். தம்பதியினர் தங்கள் மகனை ஒரு நபருக்கு ரூ.60.000 க்கு விற்றனர். குழந்தைகள் யாருக்கு விற்கப்பட்டனர் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும், இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் சிறுமியை குற்றம் சாட்டப்பட்ட ஷகீல் மக்ரானிக்கு கடந்த மாதம் 14.000 ரூபாய்க்கு விற்றனர்.” என்று தெரிவித்தார்.