ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, 'உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறை: சவால்களும் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டிய வழியும்' என்ற தலைப்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று விளக்கவுரை நடத்தப்பட்டது.


இதை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உலகமே பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது என தெரிவித்துள்ளார்.


இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நியாபக மறதி இருந்தபோதிலும், இந்த அச்சுறுத்தல் எங்கிருந்து வருகிறது என்பதை சர்வதேச சமூகம் மறந்துவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "அவர்கள் கூறுவதைப் பொறுத்தவரை, உண்மை என்னவென்றால், இன்று உலகம், பயங்கரவாதத்தின் மையமாக அவர்களைப் பார்க்கிறது. நாங்கள் இரண்டரை வருடங்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது எனக்குத் தெரியும். 


இதன் விளைவாக நம்மில் பலருக்கு நியாபக மறதி ஏற்பட்டுள்ளது. ஆனால், பயங்கரவாதம் எங்கிருந்து வெளிப்படுகிறது என்பதையும், பிராந்தியத்திலும் பிராந்தியத்திற்கு அப்பாலும் பல நடவடிக்கைகளில் தொடர்பு வைத்திருப்பவர்களையும் உலகம் மறந்துவிடவில்லை என்று நான் உறுதியளிக்கிறேன்.


எனவே, அவர்கள் கற்பனைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்கள் தங்களை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது என்று நான் கூறுவேன்" என்றார்.


இந்தியாவை காட்டிலும் வேறு எந்த நாடும் பயங்கரவாத்தை சிறப்பாக பயன்படுத்தியதில்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இதோ ரப்பானி கர் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.


2011ஆம் ஆண்டு, அப்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ரப்பானி கருடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டதை மேற்கோள் காட்டி பேசிய ஜெய்சங்கர், "உங்கள் வீட்டு முற்றத்தில் பாம்புகளை வைத்து கொண்டு, அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியது குறித்த செய்திகளை படித்தேன். 


என் நினைவு சரியாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்னர், ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். ஹினா ரப்பானி கர் அப்போது அமைச்சராக இருந்தார். அவருக்குப் அருகே நின்ற ஹிலாரி கிளிண்டன், உங்கள் வீட்டு முற்றத்தில் பாம்புகள் இருந்தால், அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டும் கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறினார். 


கொல்லைப்புறத்தில் பாம்புகளை வைத்திருப்பவர்களை அது கடிக்கும். ஆனால், உங்கள் அனைவருக்கும் தெரியும். நல்ல புத்திமதியை பாகிஸ்தான் ஏற்காது. அங்கு என்ன நடக்கிறது என அனைவருக்கும் தெரியும் என ஹிலாரி கூறியிருந்தார்" என்றார்.


தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், "பாகிஸ்தான் தனது செயலை சுத்தம் செய்து நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சிக்க வேண்டும். உலகம் ஒன்றும் முட்டாள் அல்ல. மேலும் பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகள், அமைப்புகள் மற்றும் மக்களை கண்டிப்பது அதிகரித்துள்ளது" என்றார். 


இன்னும் எவ்வளவு நாள் இதை செய்வீர்கள் என செய்தியாளர் கேட்கும்போது,  “தவறான அமைச்சரை கேட்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஏனென்றால், பாகிஸ்தான் இன்னும் எவ்வளவு காலம் தீவிரவாதத்தை கடைப்பிடிக்க விரும்புகிறது என்பதை பாகிஸ்தான் அமைச்சர்கள்தான் உங்களுக்குச் சொல்வார்கள்" என்றார்.