குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைசி  மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவைசி இவ்வாறு தெரிவித்தார்.  


2019 நாடாளுமன்ற இருஅவைகளிலும் பல்வேறு எதிர்ப்புக்குரல்கள் மத்தியல் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2014க்கு முன்பு ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, பவுத்த, சீக்கிய, சமண, மற்றும் கிறிஸ்த்துவ அகதிகளுக்கு குடியிரமை வழங்க இச்சட்டம் வழிவகிக்கிறது. மேற்கூறப்பட்ட நாடுகளில் உள்ள இஸ்லாமிய அகதிகளுக்கு இச்சதடத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படாது.       


இந்த சட்டம் 2020 ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தாலும், அதற்கான சட்ட வழிமுறைகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. மேலும், இந்திய மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக  இந்திய குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டைத் (National Register of Citizens) தயாரிப்பதற்கான எந்த முடிவையும் அரசு இதுவரை எடுக்கவில்லை. மேலும், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (National Population Register) தொடர்பான நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.   


Protest and Indian Democracy: போராட்டங்களே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள்!   


பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவைசி, " சிஏஏவை ரத்து செய்யாவிட்டால், உத்தரபிரதேச தெருக்களில் இறங்கி மற்றொரு ஷாஹீன் பாக்கை உருவாக்குவோம். இந்த போராட்டத்தை நானே முன்னின்று நடத்துவேன். மூன்று வேளாண் சட்டங்களும் பிரதமர் மோடியின் அகங்காரத்தைத் திருப்திப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. அதனைத் திரும்பப் பெறுவதைப் போலவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார். 


 


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி சட்டப்பேரவைத் தேர்தலில்   100 இடங்களில் ஓவைசி கட்சி போட்டியிடுகிறது. தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து, மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இருந்தாலும், காலம் தான் அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும். நிச்சயமாக தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் உள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.


முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தில் சிஏஏ குறித்து பேசிய பிரதமர், " தற்போதும் கூட, எந்த மதத்தைச் சேர்ந்தவரும், அவருக்கு மத நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்திய அரசியல் சாசனத்தின்மீது நம்பிக்கை கொண்டிருந்தால், உரிய சட்ட நடைமுறைகளின்படி அவர்கள் இந்திய குடியுரிமை பெறலாம். இதனைத் தெளிவுபடுத்தியப்  பிறகும், சிலர் அரசியல் காரணங்களுக்காக குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து மக்களிடையே தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 


குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தத்தால் சர்ச்சைகள் கிளம்பாமல் இருந்திருந்தால், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எத்தகைய கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்பதை உலகம் அறிந்திருக்க முடியாது"  என்றும் அவர் குறிப்பிட்டார்