Vantara SIT: சட்டவிரோதமாக வந்தாரா மையத்திற்கு விலங்குகள் கொண்டு வரப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

Continues below advertisement

வந்தாரா விலங்கியல் மையம் உறுதி:

குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் உண்மை கண்டறியும் விசாரணையை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தியாவிற்குள்ளும் வெளிநாடுகளிலிருந்தும், விலங்குகளை அந்த மையத்திற்கு கொண்டு வருவதில் குறிப்பாக யானைகளை வாங்குவதில் சட்ட மீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இதையடுத்து, வெளிப்படைத்தன்மை மற்றும் விலங்கு நலனுக்கான தனது உறுதிப்பாட்டை  வந்தாரா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

”முழு ஒத்துழைப்பு கொடுப்போம்”

வந்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். வந்தாரா வெளிப்படைத்தன்மை, இரக்கம் மற்றும் சட்டத்தை முழுமையாகப் பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது. மீட்பு, மறுவாழ்வு மற்றும் விலங்குகளைப் பராமரித்தல் என்ற அதன் பணி தொடரும். சிறப்பு விசாரணைக் குழுவுடன் முழு ஒத்துழைப்பையும் உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளது. 

சிறப்பு விசாரணைக் குழு:

ஊடக அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனவிலங்கு அமைப்புகளின் புகார்களை மேற்கோள் காட்டி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செல்லமேஸ்வர் தலைமையில் நான்கு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது. குற்றச்சாட்டுகள் சரிபார்க்கப்படாத நிலையில், "நீதியின் நோக்கத்தில்" ஒரு சுயாதீன மதிப்பீடு அவசியம் என்று பெஞ்ச் குறிப்பிட்டது. இந்த நடைமுறை உண்மை கண்டறிதலுக்கு மட்டுமே என்றும், சட்டப்பூர்வ அதிகாரிகள் அல்லது வந்தாரா மீது சந்தேகத்தை ஏற்படுத்தாது என்றும் நீதிபதிகள் விளக்கினர்.

நீதிபதி செல்லமேஸ்வரைத் தவிர, சிறப்பு விசாரணைக் குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராகவேந்திர சவுகான், முன்னாள் மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் நக்ரலே மற்றும் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அனிஷ் குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விலங்கு கையகப்படுத்துதல், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், உயிரியல் பூங்கா விதிகள், CITES விதிமுறைகள் மற்றும் இறக்குமதி-ஏற்றுமதி சட்டங்களுடன் இணங்குதல் ஆகியவற்றை SIT ஆராயும். விலங்கு நலத் தரநிலைகள், இறப்பு தரவு, கால்நடை பராமரிப்பு, வனவிலங்கு வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டுகள், கடத்தல், நிதி இணக்கம் மற்றும் தொழில்துறை மண்டலத்திற்கு அருகில் விலங்கியல் மையத்தின் இருப்பிடம் குறித்த சந்தேகம் ஆகியவற்றையும் இது மதிப்பாய்வு செய்யும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.