மனைவி அதீத சுத்தத்தை கடைப்பிடிப்பதால் அவரிடம் இருந்து விவாகரத்து கோரி கதறியுள்ளார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் கணவர். இந்த பரிதாபமான சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. தீவிரமான சுகாதாரப் பழக்கத்தால், கணவனின் லேப்டாப் மற்றும் மொபைல் ஃபோனை சோப்புப் பயன்படுத்தி கழுவியுள்ளார் மனைவி.
பெங்களூரு ஆர்டி நகரில் வசிக்கும் ராகுல் மற்றும் சுமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2009 ஆம் ஆண்டு நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த உடனேயே, கணவர் ராகுல் மனைவியுடன் ஆன்-சைட் பணிக்காக இங்கிலாந்து சென்றனர். தொடக்கத்தில் மனைவி சுமன் வீட்டை சுத்தமாக வைத்திருந்ததற்கு ராகுல் மகிழ்ச்சி அடைந்தார்.
தம்பதியரின் சுமூகமான திருமண வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் குழந்தை பிறந்த பிறகு அவர்களின் வாழ்க்கையில் பிரச்னை தொடங்கியது. போக போக மனைவியின் அதீத சுகாதாரப் பழக்கம் கணவரை எரிச்சலடையத் தொடங்கியது. ஒவ்வொரு முறையும் அவர் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, அவர் தனது உடைகள், காலணிகள் மற்றும் மொபைல் போன்களை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக தம்பதியினர், இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய பின், குடும்ப ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு, நிலைமைகள் மேம்பட்டன. அவர்கள் தங்கள் இரண்டாவது மகனைப் பெற்ற பின்னர், நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தம்பதியரின் திருமண உறவு மீண்டும் மோசமடையத் தொடங்கியது. மனைவி வீட்டில் உள்ள அனைத்தையும் சுத்தப்படுத்தத் தொடங்கினார்.
கொரோனா லாக்டவுனின் போது, கணவர் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரின் லேப்டாப் மற்றும் செல்போனை கழுவினார். இதணை கண்டு கணவர் அதிர்ச்சியானார். தனது மனைவி ஒரு நாளைக்கு ஆறு முறைக்கு மேல் குளிப்பதாகவும், அவரது குளியல் சோப்பை சுத்தம் செய்ய ஒரு பிரத்யேக சோப்பு கூட இருப்பதாகவும் குடும்ப நல ஆலோசகரிடம் கணவர் கூறினார்
இதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், நோய்வாய்ப்பட்ட மாமியார் இறந்த பிறகு, அந்த இடத்தை ஆழமாக சுத்தம் செய்ய விரும்பியதால், அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை 30 நாட்கள் வீட்டிற்கு வெளியே வைத்திருந்தார். தினமும் வீடு திரும்பிய பிறகு, தனது குழந்தைகள் பள்ளி சீருடைகள், காலணிகள் மற்றும் பைகளை துவைக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
மனைவியின் நடத்தையால் வெறுப்படைந்த கணவர் தனது குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டிற்குச் சென்றார். இதைத்தொடர்ந்து, அவரது மனைவி, இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர், அவர்கள் இந்த விஷயத்தை மகளிர் உதவி மைய போலீசாருக்கு மாற்றிவிட்டனர். நவம்பரில், மூன்று கவுன்சிலிங் அமர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் அது வீண் ஆனது. சுமனுக்கு மனநிலை பாதிப்பு இருப்பதாக சந்தேகப்பட்ட ஆலோசகர், அவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார். ஆனால், அவரோ சுத்தமாக இருப்பது தனது இயல்பு என்றும், இதில் தவறு இல்லை என்றும் கூறினார். மேலும், தான் மாறமாட்டேன் என்று கூறியதால், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற திட்டமிட்டுள்ளதாக கணவர் ராகுல் கூறினார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்