ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு வேலை பார்க்க விரும்புவதும், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததும் குற்றமல்ல கொடூரமான செயலும் அல்ல. அவையெல்லாம் விவாகரத்துக்குப் போதிய காரணமே இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தான் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தன் மனைவி தனக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மிரட்டுவதாகக் கூறி அவரிடமிருந்து விவாகரத்து கேட்டார். அதுவும் இந்தக் காரணத்துக்காக தன் மனைவி தனக்குத் தெரியாமலேயே ஒப்புதல் பெறாமலேயே கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் அந்தக் கணவர் விவாகரத்து கேட்டிருந்தார்.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அடுல் சந்த்ரூகர், நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13ன் படி மனைவியின் நடத்தை கொடூரச் செயல் ஆகாது என்றனர். அதாவது, ஒரு பெண் திருமணத்திற்குப் பின்னர் தனது தகுதிக்கேற்ப வேலை தேடிக் கொள்வது விவாகரத்துக்கான காரணமாகாது. விவாகரத்து கோரும் கணவர் தன் மனைவியின் செயல்பாட்டால் தன்னால் அவருடன் வாழ இயலவே இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றனர்.
மேலும், அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியேறி 3 ஆண்டுகளுக்குப் பின்னரே வேலையில் அமர்ந்துள்ளார். ஆதலால் அந்த காலக்கட்டத்தில் அப்பெண்ணை தன் வீட்டிற்கு திருப்பியழைத்துவர மனுதாரர் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது என்று கூறி அவரது மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதேபோல் ஒரு பெண் தனக்கு வேண்டாத கர்ப்பத்தை கலைப்பது என்பதும் அவருடைய சொந்த முடிவு என்று நீதிபதிகள் கூறினர். அண்மையில் கேரள உயர் நீதிமன்றம் கூட ஒரு கருவை கலைக்க மனைவி தனது கணவரின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்தாய்ப்பு தீர்ப்பு:
அண்மையில், திருமணமாகாத பெண்ணுக்கு பாதுகாப்பான கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பது அவரது தனிப்பட்ட சுயாட்சியை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி "சட்டத்தின் கீழ் விதிவிலக்குகள் இருக்கும் போது, மருத்துவ ஆலோசனை அனுமதிக்கும் பட்சத்தில், திருமணமாகாத பெண்களை ஏன் 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க கூடாது. "கணவன்" என்பதை "பார்ட்னர்" என்று மாற்றியதால் நாடாளுமன்றத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கப்பட்டவர்களில் அவர்கள் திருமணமாகாத பெண்களையும் கருத்தில் கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது" என்று தெரிவித்திருந்தார். விவாகரத்து பெற்றவர்கள், கைம்பெண் அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பால் பிரிந்து வாழ்பவர்கள் போன்ற திருமணமாகாத பெண்களும் தங்கள் 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கும் வகையில் தீர்ப்பை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு வேலை பார்க்க விரும்புவதும், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததும் குற்றமல்ல கொடூரமான செயலு அல்ல. அவையெல்லாம் விவாகரத்துக்குப் போதிய காரணமே இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.