இந்திய பகுதிக்குள் ஈரான் நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானம் நுழைந்தபோது, அதில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இந்திய விமான படையின் போர் விமானங்கள் அந்த விமானத்தை பின்தொடர்ந்து வருகின்றன.


 






மஹான் ஏர் விமானம் என்ற அந்த விமானம், ஈரானில் உள்ள தெஹ்ரானில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்குச் செல்லும் வழியில், இந்தியாவில் தரையிறங்குவதற்கு இரண்டு வழிகள் வழங்கப்பட்டன. அதை அந்த விமானம் மறுத்து தனது பயணத்தை தொடர்ந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.


போர் விமானங்கள் பாதுகாப்பான தூரத்தில் விமானத்தை பின்தொடர்ந்து வருவதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது. விமானம் இப்போது சீன வான்வெளிக்குள் நுழைந்துள்ளதாக விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட்ரேடார் தெரிவித்துள்ளது.


விமானத்தில் குண்டு இருப்பதாக காலை 9:20 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டெல்லி விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. "விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்குவதற்கும் பின்னர் சண்டிகரில் தரையிறங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், விமானத்தை இரண்டு விமான நிலையங்களுக்கு திருப்பி விட விருப்பம் இல்லை என விமானி தெரிவித்ததாக இந்திய விமான படை தெரிவித்துள்ளது.


வெடிகுண்டு மிரட்டலைப் பொருட்படுத்த வேண்டாம் என ஈரான் அரசு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து விமானம் சீனாவில் இறங்க வேண்டிய இடத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தது. 


 






இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "அனைத்து நடவடிக்கைகளும் வகுக்கப்பட்ட நடைமுறைகளின்படி, விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் சிவில் விமான பாதுகாப்பு முகமை (BCAS) ஆகியவற்றுடன் இணைந்து எடுக்கப்பட்டது. இந்திய வான்வழி பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது இந்திய விமானப்படையின் நெருக்கமான ரேடார் கண்காணிப்பில் இருந்தது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


டெல்லி ஏடிசிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தகவல் அளித்ததாக செய்தி வெளியாக இருந்தது.