கணவன் -மனைவி சச்சரவு செய்திகளை தினமும் கேட்டபடி இருக்கிறீர்கள் இல்லையா? காதல் மனைவி இறந்த சில மணி துளிகளில், துக்கம் தாங்காமல் கணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட நபர், அசாம் காவல்துறையை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி..


என்ன நடந்தது..? 


அசாம் அரசில் உள்துறை மற்றும் அரசியல் துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ஷிலாதித்யா சேத்தியா (44) கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி அகமோனி போர்பருவா, நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மூளை புற்றுநோய் கட்டியுடன் போராடிக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களாக அகமோனி போர்பருவாவுக்கு (40) புற்றுநோயில் இருந்து மீண்டு வர கவுகாத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அகமோனி போர்பருவா சிகிச்சை பலனின்றி மாலை 4.25 மணிக்கு உயிரிழந்தார்.


மனைவி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஷிலாதித்யா சேத்தியா, 10 நிமிடங்களுக்கு பிறகு அவரது மனைவி இருந்த ஐசியூ கேபினுக்குள் நுழைந்தார். தொடர்ந்து, மருத்துவ ஊழியர்களிடம் தனது மனைவியின் உடலுக்கு அருகில் பிரார்த்தனை செய்வதற்கு சில மணி நேரம் அனுமதிக்குமாறு கோரி, கதவை சாத்தியுள்ளார். 


அப்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில், தனது மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் ஐபிஎஸ் அதிகாரி ஷிலாதித்யா சேத்தியா தனது சொந்த சர்வீஸ் ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 


காவல்துறையினர் விளக்கம்: 


ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை குறித்து அசாம் காவல்துறை தலைமை இயக்குனர் ஜிபி சிங் தெரிவிக்கவிக்கையில், “செட்டியாவின் மனைவி மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். புற்றுநோயால் மனைவி இறந்த சில நிமிடங்களில் 2009 பேட்ச் இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரியான சேட்டியா, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) தனது அதிகாரப்பூர்வ ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார். 


மாநில உள்துறை செயலாளராக பதவியேற்பதற்கு முன்பு, செட்டியா டின்சுகியா மற்றும் சோனிட்பூர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகவும் (SP) மற்றும் அசாம் காவல்துறையின் 4 வது பட்டாலியனின் கமாண்டன்டாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், சேத்தியா குடியரசுத் தலைவரிடம் வீரப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை கேட்ட சமூக ஊடக நெட்டிசன்கள் ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி மீதான அன்பை ஒரு பக்கம் பாராட்டினாலும், அதே நேரத்தில் சிலர் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, ஷிலாதித்யா சேத்தியா தைரியமாக செயல்பட்டிருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 


தற்கொலை தீர்வாகாது:


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050