நேற்று இரவு 10.24 மணிக்கு சென்னை - மும்பை இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், விமானம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த 6E 5149 என்ற இண்டிகோ விமானத்தில் 196 பயணிகளும் 7 பணியாளர்களும் இருந்தனர்.


விமானம் அவசரமாக தரையிறங்கிய பிறகு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பணியாளர்களால் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. 


இச்சம்பவம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். பயணிகளை இறக்கிவிட்டு, விசாரணையில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பிறகு, விமானம் மீண்டும் பறக்க தயாரானது. இந்த அச்சுறுத்தல்கள் தங்கள் சேவைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.” என்று தெரிவித்தார். 


41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்:


நேற்று மும்பை மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. சோதனை அடிப்படையில் அனைத்து மிரட்டல்கள் புரளி என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்தன. 


அனைத்து விமான நிலையங்களுக்கும் பறந்த ஒரே மிரட்டல் செய்தி: 


எல்லா விமான நிலையங்களுக்கும் வந்த இ-மெயில்கள் கிட்டத்தட்ட ஒரே செய்தியைக் கொண்டிருந்தன. அந்த செய்தியில், "ஹலோ, விமான நிலையத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. விரைவில் வெடிகுண்டுகள் வெடிக்கும். நீங்கள் அனைவரும் இறந்துவிடுவீர்கள்." என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 


விமான நிலையங்கள், மருத்துவமனைக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்: 


கடந்த ஜூன் 3ம் தேதி டெல்லி-மும்பை ஆகாசா ஏர் விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதன் பிறகு பாதுகாப்பிற்காக அந்த விமானமானது அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதேபோல், கடந்த ஜூன் 2ம் தேதி பாரிஸ்-மும்பை வழித்தடத்தில் இயங்கும் விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனை தொடர்ந்து மும்பை விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானம் முழுவதும் முழு சோதனை நடைபெற்றது.


முன்னதாக, கடந்த ஜூன் 1ம் தேதி சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அப்போது அந்த விமானத்தில் 172 பயணிகள் இருந்தனர். மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


இமெயில்களில் வெடிகுண்டு மிரட்டல்:


இதன் தொடர்ச்சியாக, கடந்த இரண்டு நாட்களில் மும்பையில் உள்ள 60 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளும் அடங்கும். காவல்துறையின் கூற்றுப்படி, "இமெயில்கள் கிடைத்தவுடன், மருத்துவமனைகள் உடனடியாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் அளித்து, முழுமையான சோதனைகள் நடத்தப்பட்டன. இமெயில்கள்களில் படுக்கைகள் மற்றும் கழிப்பறைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, மருத்துவமனைகளில் உடனடியாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.” என தெரிவித்தனர். 


இப்படியாக நாளுக்குநாள் விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் என வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டே இருக்கும் நிலையில், இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்திய அரசிடமும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்து வருகின்றன.