இந்தியாவின் 70 சதவிகித மின்சாரத் தேவைகளை நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் தீர்த்து வைக்கின்றன.
சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமான அனல் மின் நிலையங்களில் நிலக்கரியின் மொத்த அளவு தேவையான அளவை விட சுமார் 25 சதவிகிதத்திற்கும் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்களில், மொத்த நிலக்கரி கையிருப்பு 10 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கூடுதல் நிலக்கரி கேட்டு, நிலக்கரி இந்தியா லிமிடெட் பொதுத்துறை நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
மத்திய மின்சார ஆணையத்தின் தரவுகளின் படி, உள்நாட்டு நிலக்கரி பயன்பாட்டின் மூலமாக நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மொத்த உற்பத்தி 182.39 GW எனவும், சராசரியாக ஒவ்வொரு அனல் மின் நிலையத்திலும் 34 சதவிகித நிலக்கரி கையிருப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சுமார் 3.56 GW மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யும் 9 அனல் மின் நிலையங்கள் தற்போது செயல்படாமல் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள மொத்த 173 அனல் மின் நிலையங்களுள், 85 நிலையங்கள் 25 சதவிகிதத்திற்கும் குறைவான நிலக்கரி கையிருப்பைக் கொண்டிருக்கின்றன. 11 அனல் மின் நிலையங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் அளவும் மிகவும் குறைந்த அளவில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டது ஏன்?
நாடு முழுவதும் மின்சாரத்தின் தேவை அதிகரித்திருப்பதை ஒட்டி நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மாதம் தோறும் 106.6 BU என்ற அளவில் இருந்த மின் தேவை கடந்த 2021ஆம் ஆண்டு, மாதம் தோறும் 124.2 BU என்ற அலவுக்கு அதிகரித்துள்ளதோடு, தற்போதைய 2022ஆம் சுமார் 132 BU என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் கடல் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக இந்தியாவில் மிகப்பெரிய அளவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. வெறும் நான்கு நாள்களுக்கு மட்டுமே போதிய நிலக்கரி இருக்கும் அளவுக்கு இந்தியாவின் நிலைமை சென்றதால் மத்திய அரசின் மேலாண்மைக் குழு இந்த தட்டுப்பாடு குறித்த காரணங்களை ஆய்வு செய்தது.
நிலக்கரி சுரங்கப் பகுதிகள் இருக்கும் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு முதலான மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலக்கரி உற்பத்தி குறைந்ததாக இந்த ஆய்வுக் குழு தெரிவித்தது. மேலும், பல்வேறு அனல் மின் நிலையங்களில் மழைக் காலத்திற்கு முன்பே நிலக்கரியின் அளவு மிகக் குறைவாக இருந்ததும் தட்டுப்பாட்டிற்குக் காரணமாக கருதப்பட்டது.
மேலும், உள்நாட்டு நிலக்கரி அளவில் இருந்து சுமார் 17.4 MT நிலக்கரி பயன்படுத்தப்பட்டதால், அது கூடுதலாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
நிலக்கரி தட்டுப்பாட்டை சரி செய்ய நிலக்கரி இந்தியா லிமிடெட் என்ன செய்யப் போகிறது?
கடந்த ஏப்ரல் 19 அன்று, நிலக்கரி இந்தியா லிமிடெட் நிறுவனம் ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் அனல் மின் நிலையங்களுக்கு வழங்கும் நிலக்கரியின் அளவை 14.2 சதவிகிதம் உயர்த்தியதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் நிலக்கரி உற்பத்தியை சுமார் 26.4 மில்லியன் டன்களாக உயர்த்தியதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளதோடு, மத்திய, மாநில மின் உற்பத்தி நிலையங்களுக்கு 2022ஆம் ஆண்டு மே 31 வரை கூடுதலாக 8.75 மில்லியன் டன் நிலக்கரி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாட்டைக் குறைக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது?
உள்நாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்க மாநில அரசுகள் கையிருப்பில் உள்ள நிலக்கரியில் 25 சதவிகிதம் வரை பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. நிலக்கரி இந்தியா லிமிடெட் நிறுவனம் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் 10 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம் எனவும் அனல் மின் நிலையங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, மத்திய அரசு சுரங்கங்களின் நிர்வாகத்தின் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டதில், நிலக்கரி உற்பத்தியை நிலக்கரி இந்தியா லிமிடெட் நிறுவனம் மட்டுமே மேற்கொள்வதைத் தடுத்துள்ளது. 50 சுரங்கங்களைக் கொண்ட தனியார் சுரங்க நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டதோடு, நிலக்கரியைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மட்டுமின்றி, எந்த தனியார் நிறுவனமும் நிலக்கரி சுரங்கங்களை நடத்துவதற்கான அனுமதியையும் அளித்தது.
இந்த சட்டத்தின் மூலமாக காடுகளில் சூழலியல் பாதிப்பும், பழங்குடி மக்களுக்கு பாதிப்பும் ஏற்படும் என ஜார்கண்ட், பீகார் முதலான மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதோடு, இந்தச் சட்டத்தின் மீதான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.