மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் வீட்டின் முன்பாக ஹனுமன் மந்திரம் (சாலீசா) ஓதப்போவதாக சவால் விடுத்த சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணா, அவருடைய மனைவியும் சுயேச்சை எம்.பி.யுமான நவ்னீத் ராணாவுடன் (நேற்று) சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
ஹனுமன் மந்திரம் ஓதும் திட்டத்தைக் கைவிடுவதாக ராணா தம்பதி அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களில், வேறுபட்ட சமூக, மொழி பிரிவினரிடையே பகைமையைத் தூண்டும் குற்றத்துக்கான சட்டப்பிரிவு 153ஏ, காவல் துறை யின் தடை உத்தரவை மீறுதல் குற்றத்துக்கான சட்டப் பிரிவு 135 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
ரவி ராணா அமராவதி மாவட்டத்தில் உள்ள பட்னேரா சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். அவருடைய மனைவி நவ்னீத் ராணா அமராவதி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.ஆனவர். இவருக்கு ஒய்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ரவி ராணா, "மகாராஷ்டிர மாநிலம் சந்தித்து வரும்பாதிப்பை போக்கவும், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும் ஹமன் சாலீசா வாசிக்கப்பட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அனுமதி தர முதல்வர் மறுத்துவிட்டார். எனவே, மும்பையின் புறநகரான பாந்த்ராவில் அமைந்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சொந்த வீடான 'மாதோஸ்ரீக்கு வெளியே சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஹனுமன் சாலீசாவை ஓத நாங்கள் திட்டமிட்டுள்ளோம்' என்று கூறினார்.
இதற்கு சிவசேனா தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெண்கள் உள்பட ஏராளமான சிவசேனா தொண்டர்கள் முதல்வரின் வீட்டின் முன்பாக வெள்ளிக்கிழமை காலை முதல் குவிந்தனர்.
இந்தநிலையில், சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் ராணா தம்பதி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை முற்றுகையிட்ட சிவசேனா தொண்டர்கள், அவர்கள் இருவரையும் வீட்டைவிட்டு வெளியே வருமாறு கோஷங்களை எழுப்பினர். மேலும், போலீஸாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, அவர்களின் குடியிருப்புக்குள் நுழைவதற்கும் முற்பட்டனர். இருந்தபோதும், அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலைமை இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளியே ஏராளமான சிவசேனை தொண்டர்கள் குவிந்திருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என ராணா தம்பதியை மூத்த காவல் அதிகாரி கேட்டுக்கொண்டார்' என்றார்.
இந்த விவகாரம் குறித்து சிவசேனா எம்.பி. அனில் தேசாய் கூறுகையில், 'மாதோஸ்ரீ இல்லம் சிவ சேனை தொண்டர்களின் கோயில் போன்றது. ஹிந்துத்துவம் சிவசேனாவின் ரத்தத்தில் ஊறியுள்ளது. எனவே, ஹிந்துத்துவம் குறித்து எங்களுக்கு யாரும் கற்பிக்க வேண்டாம். கொரோனா பாதிப்பு காலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு எவ்வாறு பணியாற்றியது என்பதை மக்கள் நன்கு அறிவர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்