Ayodhya Ram Mandir: உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா வீட்டிக் நிகழ்ந்த துக்க சம்பவம் காரணமாக, அவர் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா:
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதையேற்று ஏராளமான பிரபலங்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். அதேநேரம், பிரதமர் மோடியின் வலதுகரமாகவும், அவரது அரசில் உள்துறை அமைச்சர் பதவியை வகிக்கும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, குடமுழுக்கு விழா தொடர்பான எந்த நிகழ்விலும் இதுவரை பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அமித் ஷா வீட்டில் துக்க சம்பவம்:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூத்த சகோதரி ராஜேஸ்வரிபென் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். 60 வயதை கடந்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஸ்வரி பென் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழக்க, திங்கட்கிழமை அன்று அகமதாபாத்தில் உள்ள கால்தேஜ் பகுதி இடுகாட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதில் அமித் ஷா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். துக்க நிகழ்வால் ஏற்பட்ட தீட்டு காரணமாகவே அமித் ஷா, அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு தொடர்பான நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் கோயில் கருவறையில் சிலை நிறுவும் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் சந்தேகம் எனவே கூறப்படுகிறது.
10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்:
முக்கிய பிரமுகர்களின் வருகையையொட்டி அயோத்தியில் மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில காவல்துறை தொடங்கி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கோயில் நகரத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, கண்ணிவெடி எதிர்ப்பு டிரோன்களைப் பயன்படுத்துவதோடு, செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ஆளில்லா விமானங்கள் அயோத்தி முழுவதும் வான்வழி கண்காணிப்பை செய்து வருகின்றனர். கண்ணிவெடி எதிர்ப்பு டிரோன்கள் தரையில் வெடிபொருட்கள் அல்லது கண்னிவெடிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்கின்றன. தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் இயங்கும், என்டி-மைன் ட்ரோன்கள், நிலத்தடி வெடிபொருட்களைக் கண்டறிவதற்கான ஸ்பெக்ட்ரோமீட்டர் அலைநீளம் கண்டறிதல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. கண்காணிப்பு பணிகளுக்காக10,000 சிசிடிவி கேமராக்கள் நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன.