Ayodhya Ram Mandir: ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்களுக்கு கோயில் அறக்கட்டளை சார்பில் மஹாபிரசாதம் வழங்கப்பட உள்ளது. 


பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது. 'பிரான் பிரதிஷ்டா' என்ற பெயரில் நடைபெறும் இந்த சடங்கில், பிரதமர் மோடி பங்கேற்று குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவி ஆரத்தி வழங்கவுள்ளார். இந்த செயல்முறை பிற்பகல் 12.20-க்கு தொடங்கி  1 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 7,000 க்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை பொதுமக்கள் வீடுகளில் இருந்தே கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையோட்டி பல மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ள சூழலில், மத்திய அரசு தனது அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் பொதுமக்கள் கோயிலுக்கு வந்த தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரமாண்டமான சிலை நிறுவும் விழாவைக் குறிக்கும் வகையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள கோயில்களிலும் சிறப்பு விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் குடமுழுக்கிற்கு விழாவில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் தொழில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 7,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 506 பேர் மிக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ப்ரான் பிரதிஷ்டை விழாவில் கலந்துக்கொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது. இத்றகாக 20,000 த்துக்கும் மேற்பட்ட பிரசாத பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் நெய், 5 வகையான உலர் பழங்கள், சர்க்கரை, உளுந்து மாவு கொண்டு தயார் செய்யப்பட்ட லட்டு, சரயு நதி தீர்த்தம், அட்சதை, வெற்றிலை தட்டு ஆகியவை அடங்கும். 


இந்த பிரசாத பாக்கெட்டுகள் அனைத்தும் நேற்று அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரான் பிரதிஷ்டை விழாவை தொடர்ந்து பிரசாதம் முக்கிய விருந்தினர்களுக்கு வழங்கப்படும். மேலும் விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினருக்கு கோயில் வளாகத்தில் உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பருப்பு வகைகள் கொண்டு, திணை உணவுகளுடன் சுத்த சைவ சாப்பாடு வழங்கப்படும். இதனை டெல்லி மற்றும் வாரணாசியை சேர்ந்த சமையல் கலைஞர்கள் தயார் செய்கின்றனர். இதை தவிர்த்து இனிப்பு வகைகளும் வழங்கப்படுகிறது. 


குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலவர்கள் பங்கேற்க இருப்பதால், ஒட்டுமொத்த அயோத்தி நகரமே உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நகரம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவிஐபி நடமாட்டத்தின் போது, ​​போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கோயில் நகரின் ஒவ்வொரு முக்கிய குறுக்கு சாலையிலும் முள்கம்பிகள் இணைக்கப்பட்ட அசையும் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.