உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.


சர்ச்சையை கிளப்பும் சங்கராச்சாரியார்கள்:


ஆனால், பிரதிஷ்டையின்போது ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவதற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டோம் என 4 சங்கராச்சாரியார்களும் அறிவித்துள்ளனர்.


இதுகுறித்து விரிவாக பேசிய பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, "சங்கராச்சாரியார்கள் தங்கள் கண்ணியத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள். இது ஈகோ அல்ல. பிரதமர் ராம் லல்லா சிலையை (குழந்தை ராமர் சிலை) நிறுவும் போது நாங்கள் வெளியில் அமர்ந்து கைதட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? கும்பாபிஷேக விழாவில் மதச்சார்பற்ற அரசு பங்கேற்க வேண்டும் என்பதற்காக பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல" என்றார்.


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்ற முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ள உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் சுவாமி அவி முக்தீஸ்வரானந்த் சரஸ்வதி, "கோவிலை இன்னும் கட்டி முடிக்கவில்லை. கட்டுமான பணிகள் முழுமை பெறவில்லை.  முழுமையடையாத கோயிலில் தெய்வத்தை நிறுவுவது மத சாஸ்திரங்களுக்கு எதிரானது.


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:


என்னுடைய ஜோதிஷ் பீடம் கோயில் அறக்கட்டளையிடம் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளது. முழு கட்டுமானம் முடிந்த பின்னரே கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.


கோயில் என்பது கடவுளின் உடல் போன்றது. கோயிலின் மேற்பகுதி கடவுளின் கண்களை குறிக்கிறது. 'கலசம்' என்பது கடவுளின் தலையைக் குறிக்கிறது. கோயிலின் கொடி, கடவுளின் முடியை குறிக்கிறது. கடவுளின் தலை இல்லாமலோ கண்கள் இல்லாமலோ உடலுக்கு பிரதிஷ்டை நடத்துவது மத சாஸ்திரங்களுக்கு எதிரானது.


 






எனவே, நான் அங்கு செல்லமாட்டேன். ஏனென்றால், நான் அங்கு சென்றால் மக்கள் என் முன்னால் வேதம் மீறப்பட்டதாகக் கூறுவார்கள். எனவே, பொறுப்புள்ள நபர்களிடம், குறிப்பாக அயோத்தி அறக்கட்டளை உறுப்பினர்களிடம் கோவில் முழுவதுமாக கட்டப்பட்டவுடன் கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் பிரச்னையை எழுப்பியுள்ளோம். ஆலோசனை செய்து வருகிறோம்" என்றார்.


பூரி சங்கராச்சாரியார், உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் மட்டும் இல்லாமல் கர்நாடக, குஜராத் சங்கராச்சாரியார்களும் அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.