தமிழ்நாட்டில் முதன்மை பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். தை மாதத்தின் முதல் நாளை பொங்கல் பண்டிகையாகவும், அதற்கு அடுத்த நாளை மாட்டுப்பொங்கலாகவும், மூன்றாவது நாளை காணும் பொங்கலாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.
வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி:
உணவை அளிக்கும் விவசாயிகளை போற்றும் வகையில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையானது தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைத்திருநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும் புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று, டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தந்திருந்தார்.
தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல்:
அப்போது, தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய அவர், "பொங்கலின் போது, கடவுளுக்கு புதிய பயிர் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பாரம்பரியத்தின் மையப்புள்ளியாக விவசாயிகளை முன்னிறுத்துகிறது. தினை பற்றி ஒரு புதிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பல இளைஞர்கள் தினைகளை வைத்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர்" என்றார்.
பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளிட்ட வாழ்த்து செய்தியில், "தாய்த்தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆண்டுக்கொரு நாள் அறிவுமிகு திருநாள் பொங்கல் திருநாள். நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா. இதற்கு இணை எதுவும் இல்லை என பேரறிஞர் அண்ணா கூறுவார். களம் காண்பான் வீரன் என்றால், நெற்களம் காண்பான் உழவன் மகன்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்பது வள்ளுவன் வாக்கு. விவசாயம் தமிழ்மக்களுக்கு தொழில் மட்டுமின்றி, பண்பாட்டு மரபு. அதனால்தான் பொங்கல் பண்டிகையை பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம். பொங்கல் திருநாள் மட்டுமின்றி எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாள் என்று சொல்லும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது" என கூறியுள்ளார்.