இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. பிரிட்டிஷ் காலனியாக இருந்து, பல்வேறு இன்னல்களைக் கடந்து சுதந்திரக் காற்றை அனுபவித்த நாட்டுக்கு 75வது ஆண்டு என்பது மிகப்பெரிய மைல்கல். சுதந்திரம் வழங்கப்பட்ட 1947 முதல், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஒன்றியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றுவது மரபு. நாட்டின் எதிர்கால வளர்ச்சியை முன்வைத்து, பிரதமரின் சுதந்திர தினப் பேச்சுகளும், அதன் செய்தியும் அமைக்கப்பட்டிருக்கும். கொடியேற்றும் நிகழ்வின் மூலம், இந்திய விடுதலை இயக்கத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவது இந்நாளின் செய்தியாக அமைகிறது.
எனினும், பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?
இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாக, டெல்லி செங்கோட்டையின் லாகூர் வாயிலில் மூவண்ணக் கொடியை ஏற்றினார். 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பலம்மிக்க கட்டடமான செங்கோட்டை, மொகலாயப் பேரரசின் அரண்மனையாகச் செயல்பட்டு வந்தது. 1857ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு டெல்லியின் கடைசி மொகலாய வாரிசான பகதூர் ஷா ஜாபரைத் தோற்கடித்து, நேரடி அதிகாரத்தை அமல்படுத்தியது. அதுவரை, கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் பிரிட்டிஷ் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்தது.
1857ஆம் ஆண்டு, வட இந்தியாவிலும், மத்திய இந்தியப் பகுதிகளிலும் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் வெடித்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் பிரிட்டிஷ் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, செங்கோட்டையும், செங்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜாஃபரும் கலகத்தின் முக்கிய சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த பாரம்பரியமாக, ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றுவது மரபாக மாறியது. விடுதலைக்காக இன்னுயிர் தந்து பாடுபட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்று நினைவேந்தி வருகின்றனர். மேலும், கொடியேற்றுவது என்பது தேசியப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் செயலாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளின் போது, இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்குத் தனது உரையைத் தொலைக்காட்சிகளின் வழியாக வெளியிடுவார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய உரையில், நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கூடுதல் கவனத்தோடும், எச்சரிக்கையோடு கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஆண்டின் சுதந்திர தினம், ’Nation First, Always First’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய விளையாட்டு வீரர்கள் இந்தச் சுதந்திர தினத்தில் அரசுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வரவேற்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றி, சிறப்புரையாற்ற உள்ளார்.