காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு, செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பின் இருக்கை ஒதுக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
செங்கோட்டையில் தேசிய கொடியேற்றம்:
இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழாவானது, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் தேசிய கொடி ஏற்றிய நிலையில், அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்களும், மாவட்டங்களில் ஆட்சியர்களும் தேசிய கொடி ஏற்றினர்.
இந்நிலையில், டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி உரையாற்றினார். இந்த நிகழ்வில் , ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராகுலுக்கு கடைசி இருக்கை:
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவைத் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டது பேசு பொருளாக மாறியுள்ளது. அது என்னவென்றால், அவர் முன் இருக்கையில் அமராமல், பின் இருக்கையில் அமர்ந்திருந்ததுதான்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கேபினட் அமைச்சர் பதவிக்கு நிகரானது என்பதால் வழக்கமான நெறிமுறையின்படி முதல் வரிசையில் இருக்கை வரிசை ஒதுக்கப்படும்.
இந்த புகைப்படமானது, சமூக வலைதளங்களில் பரவி, வைரலானது. அதில், ஏன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முன் இருக்கை ஒதுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியிருப்பதை பார்க்க முடிந்தது.
ஏன் பின் இருக்கை?
இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஏன் பின் இருக்கை ஒதுக்கப்பட்டது குறித்து, சுதந்திர தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, முன் வரிசையில் உள்ள இருக்கைகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டதால், காங்கிரஸ் எம்.பி.யை கடைசி வரிசைக்கு மாற்ற வேண்டியிருந்தது என்று சுதந்திர தின நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு பொறுப்புள்ள பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, எந்த எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சி தலைவருக்கான தேவையான இடங்களில் வெற்றி பெறாததால் , எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. தற்போது காங்கிரஸ் கட்சி 99 இடங்களைப் பெற்றதையடுத்து, ஜூன் 25ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார்.