செயற்கைக்கோள் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதி நவீன இ.ஓ.எஸ் -08 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறிய ரக எஸ். எஸ்.எல்.வி. டி-3 மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை (16.08.24) அன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் ஆயுட்காலம் ஓராண்டு ஆகும். மேலும் இந்த செயற்கைக்கோள் தரையில் இருந்து 475 கி.மீ தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்களை தொலைதொடர்பு பயன்பாட்டிற்காக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இ.ஓ.எஸ் -08 என்ற செயற்கைக்கோளும் நாளை காலை 9.17 மணிக்கு சதீஷ் தவன் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய இருப்பது குறிப்பிடத்தக்கது.
இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளின் பயன்பாடு:
இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவிடோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இ.ஓ.ஐ.ஆர் கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புகாக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும். அதேபோல ஜி.என்.எஸ்.எஸ்.ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர் நிலைகளை கண்டறிதல், தீ கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்க உதவுகிறது. எரிமலை செயல்பாடு கண்காணிப்பு மற்றும் தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவை இந்த பேலோடின் செயல்பாடாகும். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.17 மணிக்கு இதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. தொடர்ந்து ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. அதோடு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து விண்ணில் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
ஆந்திராவில் விஞ்ஞானிகள் குழுவினர் சாமி தரிசனம்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதியான நாளை காலை விண்ணில் புதிய செயற்கைக்கோள் சீறிப்பாய உள்ளது. குறிப்பாக பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில் திட்டமிட்ட இலக்கான 475 கிலோ மீட்டர் தூரத்தில் பிரதான செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்-08யும், தொடர்ந்து 16வது நிமிடத்தில் மாதிரி செயற்கைகோளையும் நிலை நிறுத்திவிடும். இந்த நிகழ்வு நாளை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று இஸ்ரோ குழுவினர் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம் செய்தனர்.