`ரெட் இங்க் விருதுகள்’ ஆண்டுதோறும் மும்பை பத்திரிகையாளர் மன்றத்தால் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படும் இந்த விருதுகள், நல்ல இதழியலை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு வழங்கப்படுகின்றன. 


ஊடகவியலாளர்கள் தங்கள் பணியைத் திறம்பட செய்வதற்காக ஊக்குவிப்பதற்கும், நல்ல தரம் கொண்ட எழுத்துகளும், படைப்புகளும் உருவாவதற்கும், அறம் சார்ந்த அணுகுமுறையோடு ஊடகவியலாளர்கள் செயல்படுவதற்கும் `ரெட் இங்க் விருதுகள்’ ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. 


அச்சு இதழ்களிலோ, டிஜிட்டல் தளங்களிலோ கட்டுரை பிரசுரம் செய்த ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சியில் தங்கள் செய்திகளைப் பிரசுரித்த ஊடகவியலாளர்கள், தங்கள் புகைப்படங்களால் மாற்றத்தை உருவாக்கிய ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 



வர்த்தகம், க்ரைம், சூழல், உடல்நலம், மனித உரிமைகள், பொழுதுபோக்கு, அரசியல், அறிவியல், விளையாட்டு, பெண்கள் முன்னேற்றம், பாலின சமத்துவம், கலைகள், சிறந்த புகைப்படம் முதலான பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 


இவை மட்டுமின்றி, மும்பை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஊடகத்துறையின் வளர்ச்சிக்காக பங்காற்றிய மூத்த ஊடகவியலாளர்களுக்கு `ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர்’ என்ற விருதும், `வாழ்நாள் சாதனையாளர்’ என்ற விருதும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. 


இந்த விருதுகளை வெல்பவர்களுக்கு பரிசாக 1 லட்சம் ரூபாய் தொகையும், கோப்பையும், சான்றிதழும் வழங்கப்படுகின்றன. 


இந்த ஆண்டின் `ரெட் இங்க் விருதுகள்’ இணைய வழியில் நடைபெறவுள்ளன. மேலும், ரெட் இங்க் விருதுகளைப் பெற்றவர்களுக்கு விருதுகளை இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வழங்குகிறார்.



டேனிஷ் சித்திகி


 


ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவரும், சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தவருமான புகைப்படக் காரர் டேனிஷ் சித்திகி இந்த ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், 83 வயதான மூத்த பத்திரிகையாளர் பிரேம் ஷங்கர் ஜா வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார். 


மனித உரிமைகள் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகர் தமிழரசு இந்த ஆண்டு விருது பெறுகிறார். கடந்த ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த கொலை குறித்து எழுதிய கட்டுரைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.