Anand Ambani - Radhika Wedding: அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் தான், தற்போது நாட்டின் மிக முக்கிய பேசுபொருளாக உள்ளது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்டின் திருமணம்:
நாட்டின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளையமகனான ஆனந்திற்கு, பெரும் தொழிலதிபரான வைரென் மெச்சர்ன்டின் மகள் ராதிகாவிற்கும் திருமணம் நடைபெற உள்ளது. இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த திருமணத்திற்காக, மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் மிக முக்கிய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டுத்துறையை சேர்ந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இதற்காக உலகின் தலைசிறந்த கலைஞர்களை கொண்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கவனத்தை ஈர்க்கும் அம்பானி குடும்ப ஆடைகள்:
திருமணத்திற்கான ஒவ்வொன்றயும் அம்பானி குடும்பத்தினர் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். மிகவும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அம்பானி குடும்பத்தினரின் ஆடைகள் சமூக வலைதளங்களில் பலரையும் வாயை பிளக்கச் செய்துள்ளது. அந்த அளவிற்கு தத்ரூபமாகவும், மிகவும் கலைநயத்துடனும் அம்பானி குடும்பத்தினரின் ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், அம்பானி குடும்பத்தின் ஆடை தேர்வு , பெரும் வணிக நோக்கத்தையும் கொண்டுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
சப்யசாச்சி ஆடைகளை தவிர்த்த அம்பானி குடும்பம்..!
குஜராத்தின் ஜாம்நகர் மற்றும் யூரோப் வரையிலான சொகுசு கப்பல் என, திருமணம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், சுவாரஸ்யமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜியின் ஆடைகள் அம்பானியின் திருமண நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இடம்பெறவில்லை. இதனை இணையத்திலும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். சப்யசாச்சி திருமண உடைகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார். இதனால் திருமணத்தில் நீதா அம்பானி, இஷா அம்பானி, ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர், சப்யசாச்சியால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிவார்கள் என்று பலர் எதிர்பார்த்தனர். இருப்பினும், அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மணீஷ் மல்ஹோத்ரா மற்றும் அபு ஜானி சந்தீப் கோஸ்லா (AJSK) வடிவமைத்த ஆடைகளை தேர்வு செய்து பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும், மாமேரு நிகழ்ச்சிக்கு மட்டும் நீதா அம்பானி சப்யசாச்சி புடவையைத் தேர்வு செய்திருந்தார்.
திருமண ஆடைகளில் வணிக செய்யும் அம்பானி குடும்பம்:
சப்யசாச்சி முகர்ஜிக்கு சொந்தமான பிராண்டான சப்யசாச்சி என்ற இந்திய சொகுசு வடிவமைப்பாளர் லேபிளில் ஆதித்யா பிர்லா 51 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. அதேநேரம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் (ஆர்பிஎல்) ஃபேஷன், டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா, எம்எம் ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 40% பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. பிரபல டிசைனர் ரிதுகுமாரின் நிறுவனத்திலும் 52% பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியுள்ளது.
இதன் காரணமாக தான் போட்டி நிறுவனமான சப்யசாச்சி ஆடைகளை தவிர்த்து, தங்களது பங்குகள் உள்ள மணீஷ் மல்ஹோத்ரா நிறுவனத்தின் ஆடைகளை அம்பானி குடும்பம் பயன்படுத்தியுள்ளது. ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை, தங்கள் நிறுவனத்தின் விளம்பர தளமாகவும் அம்பானி குடும்பம் மாற்றியுள்ளது.