Anand Ambani - Radhika Marriage:  ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்டின் திருமணத்தில், பல்வேறு துறைகளைச் சாந்த பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.


ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணம்:



இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.  மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணத்திற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  திருமண விழா ஜூலை 12-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி நிறைவடைகிறது. அதன்படி, ஜூலை 12-ம் தேதி திருமணம் அல்லது சுப விவாஹத்துடன் நட்சத்திர விழா தொடங்கும். ஜூலை 13 அன்று, ஆசீர்வாத சடங்கு அல்லது சுப் ஆஷிர்வாத் இருக்கும். கடைசி நாளான 14ம் தேதி அன்று, திருமண வரவேற்பு நாள் அல்லது மங்கள் உத்சவ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் இந்தியா தொடங்கி பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த, ஏராளமான துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.


மும்பையில் குவியும் சர்வதேச அரசியல் தலைவர்கள்:


ஆனந்த் - ராதிகா திருமண விருந்தில், திரைத்துறையில்  இருந்து பல முன்னணி நடிகர்களும்,  மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் மற்றும் பெரும் தொழிலதிபர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  இங்கிலாந்து முன்னாள்  பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி ,  இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர், முன்னாள் ஸ்வீடன் பிரதமர் கார்ல் பில்ட்,  கனடாவின் முன்னாள் பிரதமர், தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.


தொழிலதிபர்களும், விளையாட்டு வீரர்களும்:


ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி கால்பந்து சங்கத்தின் (FIFA) தலைவரான கியானி இன்ஃபான்டினோ மற்றும். சமூக வலைதள தொழில்முனைவோரான ஜே ஷெட்டி மற்றும் ஸ்டீபன் ஹார்பர் ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும்,  சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ, லாக்ஹீட் மார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் டெய்க்லெட், எச்எஸ்பிசி குழுமத் தலைவர் மார்க் டக்கர், அராம்கோ சிஇஓ அமின் நாசர், மோர்கன் ஸ்டான்லி எம்டி மைக்கேல் க்ரைம்ஸ், அடோப் சிஇஓ சாந்தனு நாராயண், பிபி சிஇஓ முர்ரே அவுச்சின்க்ளோஸ் மற்றும் டெமாசெக் சிஇஓ தில்ஹான் பி ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்க உள்ளனர்.


படையெடுக்கும் திரைபிரபலங்கள்:


தொழில் அதிபர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தவிர, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதற்கான விருந்தினர் பட்டியலில் கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன், மைக் டைசன், ஜான் சீனா, டேவிட் பெக்காம் மற்றும் அடீல் ஆகியோர் அடங்குவர். மேலும் சல்மான் கான், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ், ராம் சரண், மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்ற பிரபலங்கள் திருமணத்திற்காக ஏற்கனவே மும்பை வந்துள்ளனர்.


முகேஷ் அம்பானி தனது இளைய மகனின் திருமணத்திற்காக பல மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். கலை நிகழ்ச்சிகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த கலைஞர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.