திரிணாமுல் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா செவ்வாயன்று, தொழில்துறை உற்பத்தியில் அது தொடர்பான டேட்டாக்களை மேற்கோள் காட்டி, பொருளாதார முன்னேற்றம் குறித்த அரசின் முன்முடிவுகளைச் சாடிப் பேசியுள்ளார்.  ”ஒவ்வொரு பிப்ரவரி மாதமும், பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும், அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கின்றன என்றும் அரசாங்கம் தவறாமல் சொல்கிறது” என்று அவர் பேசியுள்ளார். ஆனால் அத்தனைப் பேச்சுகளும் பொய், எட்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போது டிசம்பரில் அத்தனை உண்மையும் வெளிவந்துள்ளது.அதன்படி பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக ரூபாய் 3.26 லட்சம் கோடி நிதி இதற்காகத் தேவை என்று அரசு கூறியுள்ளது என்றார் அவர்.


2022-23ம் ஆண்டிற்கான கூடுதல் மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான லோக்சபா விவாதத்தில் பேசிய மொய்த்ரா, இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி நரேந்திர மோடி அரசாங்கம் தவறான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். 




தனது உரையில் எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விஃப்ட்டை மேற்கோள் காட்டிப் பேசிய மொய்த்ரா "கொடூரமான எழுத்தாளனுக்கு வாசகர்கள் இருப்பது போல, மிகப் பெரிய பொய்யருக்கும் விசுவாசிகள் உள்ளனர். மேலும், ஒரு பொய்யை ஒரு மணிநேரம் மட்டுமே நம்பினால் கூட, அது அதன் வேலையைச் செய்யத் தொடங்கிவிடும். அதற்கு அதிக கால அவகாசம் இல்லை என்பதால் பொய் துரிதமாக வேலை செய்கிறது. ஆனால் உண்மை அதன் பின்னால் நொண்டியபடியே வருகிறது” என்றார் அவர். 


ராகுல் காந்தியைப் பப்பு என விமர்சனம் செய்யும் பாஜகவினரைக் குறிப்பிட்டுப் பேசிய மஹூவா
"இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியும் பப்பு என்ற வார்த்தையை உருவாக்கியது. நீங்கள் அதை இழிவுபடுத்தவும், தீவிர திறமையின்மையைக் குறிக்கவும் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் உண்மையான பப்பு யார் என்பதை புள்ளிவிவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன," என்றார். தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளைக் குறிப்பிடுகையில் அக்டோபரில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி நான்கு சதவீதம் குறைந்து 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு, உற்பத்தித் துறையானது  5.6 சதவிகிதமாக சுருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய மஹூவா ஆளுங்கட்சித் தலைவரால் தனது சொந்த மாநிலத்திலேயே ஜெயிக்க முடியவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் பப்பு? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே இந்திய மக்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து வெளியேறுவதைக் குறிப்பிட்டுப் பேசிய மஹூவா "தொழில்துறை உற்பத்தி குறியீட்டை உருவாக்கும் தொழில் துறைகளில் 17 எதிர்மறையான வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளன. அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு வருடத்திற்குள் $72 பில்லியன் குறைந்துள்ளது.  


நிதியமைச்சர் நேற்று கேள்வி நேரத்தின் போது 50 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டு வரவு எவ்வளவு வெளிப்படையாக உள்ளது என்று குறிப்பிட்டார். வளர்ந்து வரும் சந்தைகள் இந்தியாவிற்குள் வருகின்றன. ஆனால் கிட்டத்தட்ட 2,00,000 பேர் 2022ம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் அவர்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. 2022ம் ஆண்டின் இந்த வெளியேற்றம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த அரசாங்கத்தின் கீழ் இந்தியக் குடியுரிமையைத் துறந்த மொத்த இந்தியர்களின் எண்ணிக்கையை 12.5 லட்சத்துக்கும் அதிகமாகக் கொண்டு செல்கிறது" என்று அவர் கூறினார்.


"இது ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அறிகுறியா? ஆரோக்கியமான வரிச்சூழலின் அடையாளமா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு? இந்த நாட்டில் ஒரு பயங்கரமான சூழல் நிலவுகிறது, அமலாக்க இயக்குநரகத்தின் வாள், வணிகர்கள் மற்றும் அதிக சொத்து மதிப்புள்ள தனிநபர்களை நோக்கிச் செல்ல வேண்டும்" என்று அவர் கூறினார்