இயக்குநர் லீனா மணிமேகலையின் காளி ஆவணப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திருட்டுப்பயலே இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறினார். மீடூவின் கீழ் அவர் சொன்ன புகாரால் விவாதங்கள் கிளம்பின. தற்போது அவர் இயக்கியுள்ள ஆவணப்பட போஸ்டரால் சர்ச்சை கிளம்பியுள்ளது.


யார் இந்த லீனா மணிமேகலை?
இவர் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மகாராஜபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் தற்போது கனடாவில் வசிக்கிறார். ஆகையால் டொரோன்டோவிலிருந்து இயங்கும் திரைப்பட இயக்குநராகவே அறியப்படுகிறார். இவர் திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல எழுத்தாளரும் கூட. பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஈழப் போராட்டம் உட்பட்டன இவரது கவிதைகளின் கருப்பொருள்களாக அமைகின்றன.


தேவதைகள், பெண்ணாடி, மாத்தம்மா, பறை (ஆவண நிகழ்படம்), பலிபீடம், தீர்ந்து போயிருந்த காதல் போன்ற ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இவரது முதல் படம் 2021ல் வெளியான மாடத்தி ஆன் அன்ஃபேரி டேல். 


சர்ச்சையின் பின்னணி:
இயக்குநர் லீனா மணிமேகலை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த அவரது படத்தின் போஸ்டர் ஒன்று காளியை அவமதிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், அவர் மீது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் லீனா மணிமேகலை தற்போது கனடாவின் டொரண்டோ பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது திரைப்படத்தின் போஸ்டரை அவர் பகிர்ந்திருந்தார். இதில் இந்துக் கடவுளான காளியின் வேடத்தில் ஒரு பெண் புகைபிடிக்கும் விதமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் பின்னணியின் தன்பாலீர்ப்பாளர்களின் அடையாளமான வானவில் கொடியும் இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சர்ச்சைக்கு லீனாவின் பதிலடி:


லீனா மணிமேகலையின் லேட்டஸ்ட் ஆவணப்படமான காளியின் போஸ்டர் சர்ச்சையாகியுள்ள நிலையில் அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் இழப்பதற்கு ஏதுமில்லை. அதனால் நான் வாழும்வரை என் நம்பிக்கைகளை எந்தவித அச்சமும் இன்றி பேச நான் முற்படுவேன். அதற்கான விலை என் உயிர்தான் என்றால். அதைக் கொடுக்க அஞ்ச மாட்டேன். 






மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தால் “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க. அதனால் பட போஸ்டரின் உள்ளே பொதிந்துள்ள அர்த்தத்தை படத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முற்படுங்கள் என்று கூறியுள்ளார்.