சமூக ஊடகங்களின்  பயன்பாடு மக்களிடம் பிரபலமாகியுள்ள நிலையில், இவை நினைத்தால் ஒரு மனிதனை கண் சிமிட்டும் நொடியில் உச்சத்தினை அடைய வைக்க முடியும், அதே வேளையில் உயரத்தில் உள்ள மனிதனை கீழே இறக்கிவிடமுடியும் என்பதுதான் உண்மை. அதிலும் என்ன டிரோல் செய்யலாம் என காத்திருக்கும் சமூக ஊடகப்பிரியர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த பிரச்சனைகளை பற்றி பேசி வீடியோ வெளியிட்டாலும் அது அவர்களுக்கு குதூகலம் தான். ஒருபுறம் ஆதரவாளர்களும், ஒரு புறமும் எதிர்ப்பாளர்களும் கிளம்பிவிடுவார்கள். அப்படி தான் பீகாரினை சேர்ந்த பிரபலமான ஆன் லைன் டீச்சர் கான் சார் (Khan sir) தற்போது பிரச்சனையில் சிக்கி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறார்.


யார் இந்த கான் சார் (Khan sir) அப்படி என்னதான் இவர் ஆன்லைன் வகுப்பில் பேசினார்? என்பது பற்றிப்பார்க்கலாம். பீகாரினை சேர்ந்த இவர் கான் ஜி.எஸ் ஆராய்ச்சி மையம்( Khan GS Research Centre) என்ற யூடியூப் சேனலை தொடங்கி அதன் வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறார். அதிலும் தனது யூடியூப் சேனலில் பொது அறிவியலில் உள்ள முக்கியமான தலைப்புகளை  தேர்ந்தெடுத்து தனித்துவமான வழிகளில் மாணவர்களுக்கு புரியும் படி ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதால் மிகவும் பிரபலமாகி இருந்தார். இதோடு பீகாரி பேச்சுவழக்கில் அவர் நடத்தும் வகுப்புகள் மாணவர்களை அதிகம் கவரும்படியாக இருந்து வருகிறது. தற்போது வரை கான் ஜி.எஸ் ஆராய்ச்சி மையம்( Khan GS Research Centre) என்ற யூடியூப் சேனலுக்கு 94 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள்(9.47M subscribers) உள்ளனர்.


இப்படி மாணவர்களிடம் ஆன்லைன் வகுப்புகளின் மூலம் பிரபலமாகி இருக்கும் இவர் மீது ஏன் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய போர் வெடித்துள்ளது தெரியுமா? இவர் வழக்கம் போல் ஆன்லைன் வாயிலாக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி வகுப்புகளை தொடங்கியுள்ளார். அந்நாளின் தலைப்பாக  பிரான்ஸ்-பாகிஸ்தான் உறவுகள் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவில், பாகிஸ்தான் வந்த பிரெஞ்சு தூதரை திருப்பி அனுப்ப அங்கு வெகுஜன போராட்டங்கள் நடைபெற்று வருவதாக ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டங்களில் குழந்தைகளும் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்து அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோ நெட்டிசன்களுக்கு எரிச்சலூட்டியது.


மதவாதத்தைப்பற்றி பேசுவதற்கு அவர் யார் என பல்வேறு கேள்விகளை எழுப்பி சமூக ஊடகங்களில் ஆன்லைன் டீச்சருக்கு ஆதரவாகவும், எதிராகவும் குழுக்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டன. பல ட்விட்டர் பயனர்கள் ஆன்லைன் டீச்சர் கான் சாரின்  வீடியோவை கடுமையாக விமர்சித்து, 'கான் சர் இஸ்லாமோபோபிக்' '(Khan Sir Islamophobic') என்று அழைத்தனர், மேலும் அவர் ஒரு முஸ்லீம் அல்ல எனவும் ஆனால் ஒரு இந்து எனவும் டிவிட் செய்துள்ளனர். மேலும் உண்மையான பெயர் 'அமித் சிங்' என்று சிலர் அவருக்கு எதிராக கருத்துக்களை கூறிவருகின்றனர். இதனால்  இதனால் #Amithsingh என்ற ஹாஸ்டாக்கும் டிவிட்டரில் டிரெண்டில் உள்ளது.  மேலும்  டிவிட்டரில் அவருக்கு ஆதரவாக #supportkhansir என்ற பக்கத்தில் இதுபோன்ற “ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்“ என்றும், மற்ற ஆசிரியர்களை விட நீங்கள் மிகவும் சிறந்தவர்கள் என்று பல்வேறு ஆதரவு கருத்துக்களை டிவிட் செய்து வருகின்றனர்.


மேலும் ட்விட்டரில் #ReportKhanSir உடன் வீடியோ வைரலாகியவுடன், மக்கள் ஆன்லைன் ஆசிரியரைப் பற்றிய கூடுதல் தகவல்களைத் தோண்டத் தொடங்கினர் மற்றும் ரக்ஷா பந்தன் உள்ளிட்ட முக்கியமான இந்துக்களால் கொண்டாடப்பட்ட ஒரு திருவிழாவின் போது அவரது படங்களைக் கண்டறிந்ததோடு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.


இப்படிப்பட்ட சூழலில் தான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் இப்பிரச்சனைக்குறித்து பீகார் ஆன்லைன் ஆசிரியர் கான் சார் அவரது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதில்  என்னுடைய பெயர் பற்றி தவறான கருத்துக்கள் வெளிவருவதாகவும், தனது சேனலில் கான்  என இருப்பதால், சில மாணவர்கள் அவரை 'கான் சர்' என்ற பெயரில் அனைவரும் அறிந்திருப்பதால் உண்மையான பெயரை அறிந்து கொள்ளும்படி வற்புறுத்தினார்கள்.   எனவே சிலர் என்னை 'அமித் சிங்' என்று அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களுக்கு சென்றாலும் என்னை அமித் சிங் என்று அழைப்பதால் என்னுடைய உண்மையான பெயரினை நான் ஒரு போதும் செல்லவில்லை என கூறுகிறார். இதோடு கான் என்பது என்னுடைய பெயர் அல்ல. அது வெறும் தலைப்பு என கூறியுள்ள அவர், கிரண் வெளியீட்டில் 26 க்கும் மேற்பட்ட புத்தகங்களை கான் சார் என்ற பெயரில் வெளியிட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதோடு பல பிரபலமான எழுத்தாளர்களுக்கு பெயர் தெரிவது இல்லை, குடும்பப் பெயர்களால் தான் அழைப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியாக நான் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் நல்ல கல்வி அறிவினை பெற வேண்டும் என்பதற்காக உருது மொழியிலும் புத்தகங்களை எழுதி இருப்பதாக வீடியோவில் தெரிவித்து சமூக வலைத்தள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


ஒரு பெயரில் என்ன இருக்கிறது?  என்பது குறித்து ரோமியோ ஜூலியட் புத்தகத்திலிருந்து பிரபல எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் கருத்தின் படி, இந்தியாவில் நபரின் பெயரினை வைத்து சர்ச்சைக் கருத்துக்களை மக்கள் பரப்புகிறார்கள் என்பதற்கு பீகாரினைச் சேர்ந்த ஆன்லைன் ஆசிரியர் கான் சார் ஒரு சிறந்த உதாரணம் என்றே கூறலாம்…