இந்திய இசைக்கருவிகளின் மூலம் வரும் இசையை வாகனங்களின் ஹாரன்களாக பயன்படுத்த புதிய சட்டம் கொண்டு வர இருப்பதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக்கில் நடைபெற்ற புதிய நெடுஞ்சாலை தொடக்க விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அதிக இறைச்சல் தரும் ஆம்புலன்சுகள், போலீஸ் வாகனங்களின் ஹாரன் ஒலிகளுக்கு பதிலாக ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் புதிய இசையை மாற்ற திட்டமிட்டு வருவதாக அவர் கூறி உள்ளார்.
ஆல் இந்தியா ரேடியோ FM-ல் எப்போது காலையில் ஒலிக்கப்படும் ஆகாஷவானி இசையை ஆம்புலன்சுகளுக்கு மாற்றினால் மக்கள் அதை இனிமையாக உணர்வார்கள் எனக் கூறினார். குறிப்பாக அமைச்சர்கள் சைரன் வைத்த வாகனங்களுடன் அதிக ஒலி எழுப்பி செல்லும்போது மிகவும் அறுவறுப்பாக இருப்பதாக தெரிவித்த நிதின் கட்கரி, அதனால் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி உள்ளார்.
இந்த திட்டம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அனைத்து வாகனங்களிலும் அதிக ஒலி எழுப்பும் வழக்கமான ஹாரன்களுக்கு பதிலாக இந்திய இசைக் கருவிகளான ஃப்ளூட், தபேலா, வயலின், மௌத் ஆர்கன், ஆர்மோனியம் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இசையை ஹாரன்களாக மாற்ற விரைவில் புதிதாக சட்டமன்ற கொண்டு திட்டமிட்டு வருவதாக கூறி உள்ளார்.
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தொழிற்சாலைகள், பட்டாசுகள், ஒலிபெருக்கிகள் போன்ற பல்வேறு காரணங்களால் ஒலி மாசு அதிகரித்து வருகிறது. இவற்றில் பெரும்பாலும் வாகனங்களின் ஹாரன் சத்தம், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகன சைரன் சத்தங்களே மக்களின் காதை கிழிக்கின்றன. இந்தியாவின் நகர்புறங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 31.8% ஒலி மாசு அதிகரித்து உள்ளது. ஒலி மாசு காரணமாக இதய கோளாறுகள், செவித் திறன் குறைபாடு, மன நல பாதிப்புகள்,இன்சோம்னீயா, ஹைபர் டென்சன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதனை கட்டுப்படுத்த 2006 ஆம் கொண்டு வரப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் கொள்கையில், பகுதி வாரியாக அதிகபட்ச ஒலி பயன்பாட்டை கொண்டு வர வேண்டும் எனவும், ஒலிப் பெருக்கிகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் தடுத்து அதன் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கட்டுமானம் மற்றும் இதர துறைகளில் அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு மாற்றாக நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஒலி மாசு கூடிக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரின் இந்த புதிய திட்டம் கவனத்தை பெறுகிறது. அவரது திட்டம் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், ஆம்புலன்ஸ் சைரன்களுக்கு பதில் ஆகாசவானி இசையை ஒலிப்பது ஆபத்தானது மற்றும் ஆம்புலன்ஸ் வருவதை மக்களால் எளிதில் உணர முடியாது எனவும் மக்கள் கருத்திட்டு வருகின்றனர்.
நிதின் கட்கரியின் கருத்தும் மக்களின் ரியாக்சனும்..