வாட்ஸ் அப் பே செயலியின் இந்திய தலைவர் வினய் சொலேட்டி ராஜினாமா செய்தார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தப் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் இரண்டே மாதங்களில் அவர் விலகியுள்ளார். இரண்டே மாதங்களில் உயர் பதவியில் இருந்த ஒருவர் பதவி விலகியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இரண்டு மாதங்களில் உயர் பதவியில் உள்ளவர்கள் பதவி விலகுவது இது இரண்டாவது முறையாகும். செப்டம்பர் முற்பாதியில் வாட்ஸ் அப் இந்தியாவின் தலைவர் மனேஷ் மஹாத்மே ராஜினாமா செய்தார். இந்நிலையில் இப்போது அதன் நிதித் துறை தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக வினய் சொலேட்டி, லிங்க்ட் இன் பக்கத்தில், வாட்ஸ் அப் பே நிறுவனத்தில் இன்று எனது கடைசி நாள். இன்றுடன் நான் இங்கிருந்து விடை பெறுகிறேன். இந்தியாவில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் வீச்சை அருகில் இருந்து பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. கடந்த ஒராண்டாக தனிப்பட்ட முறையில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்தப் பயணம் ருசிகரமானது. முதன்மைப் பொறுப்பில் இருந்து பெங்களூரு மெட்ரோவுக்கு க்யூஆர் டிக்கெட் உள்ளிட்ட முதன்முதல் பேமென்ட் வழிமுறைகள் சிலவற்றை நான் மேற்கொண்டேன். இந்த புதிய நடைமுறைக்கு வாடிக்கையாளர்கள் தங்களை விரைவாக தகவமைத்துக் கொண்டனர். அந்த பெருமித அடையாளத்தை நான் என்றும் சுமப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் சொலேட்டி தனது அடுத்த திட்டங்களை தெரிவிக்கவில்லை. நான் எனது அடுத்த பயணத்தை தொடங்கும் வேளையில், வாட்ஸ் அப் பெரிய அளவில் டிஜிட்டல் பேமென்ட் முறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன் என்றும் சொலேட்டி குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ் அப் பே சேவையை பெறுவது எப்படி?
உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் பணம் அனுப்பலாம். இது யுபிஐ சேவையை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் பணம் அனுப்புவது மட்டுமல்லாமல், பணமும் பெற்றுக் கொள்ளலாம். முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வாட்ஸ் அப் பே சேவை சோதனை அடிப்படையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், வாட்ஸ் அப் பே சேவையை படிப்படியாக அமல்படுத்துவதற்கு ஒப்புதல் கிடைத்தது. முதல் கட்டமாக, நாட்டில் உள்ள 10 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை வாட்ஸ் அப் வழங்கி வருகிறது.
வாட்ஸ் அப் பே சேவையை பயன்படுத்துவதற்கு யூஸர் முதலில் கான்டாக்ட்ஸ் லிஸ்ட்டில் உள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும். இந்தக் கோரிக்கை மறுமுனையில் உள்ள வாடிக்கையாளருக்கு கிடைத்ததும், அந்த யூஸர் வாட்ஸ் அப்-பில் யுபிஐ அக்கவுண்ட் நிறுவி கொள்ளலாம்.