ஆபாசப் பட வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் உள்ளார் பாலிவுட் பிரபலம் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. சில தினங்களுக்கு முன்னதாக, இவரை போலீஸார் விசாரணையின் நிமித்தமாக வீட்டுக்கே அழைத்து வந்தனர். மும்பை ஜுஹூ பகுதியில் ஒய்யாரமான பிரம்மாண்டமான பங்களாவில் தான் ஷில்பா ராஜ்குந்த்ரா வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான் ஆபாசப்பட வழக்கில் ராஜ்குந்த்ரா சிக்கிக் கொண்டார்.
ஏன் இப்படிச் செய்தீர்கள் ராஜ்?!
வீட்டுக்கு போலீஸார் புடை சூழ வந்த ராஜ்குந்த்ராவைப் பார்த்தவுடன் ஷில்பா ஷெட்டி ஆவேசமனார். "ராஜ், நம்மிடம் எல்லாமே இருக்கிறது. எதற்காக இதைச் செய்தீர்கள். இதைச் செய்வதற்கான அவசியம் என்ன ராஜ்?" என்று சரமாரியாகக் கத்தியுள்ளார். கண்ணீர் மல்கவும் கணவரிடமிம் சில,பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இருவருக்கும் இடையே மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் போலீஸார் தலையிட்டு வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். பின்னர், ஷில்பா ஷெட்டியிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
விசாரணை குறித்து மும்பை போலீஸார், "ஆபாசப்படம் தயாரிப்பு வழக்கில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அவரது மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். ராஜ்குந்த்ராவால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன் வந்து புகாரளிக்கலாம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. வியான் இண்டஸ்ட்ரீஸ் (Viaan industries) என்ற பெயரில் ராஜ்குந்த்ரா சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பை அந்தேரியில் உள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலம் படவாய்ப்பு தேடி வரும் இளம் பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஒப்பந்தம் செய்து பின்னர் அரை நிர்வாணம், முழு நிர்வாணமாக ஆபாசப் படங்களில் நடிக்க வைத்துள்ளனர் என்பதே புகார். குந்த்ரா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களும் நடிகரும் தயாரிப்பாளர்களுமான கெஹான் வசிஷ்ட், உமேஷ் காமத் மீது இளம் பெண் ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக ஆபாசப் படத்தில் நடிக்க வைப்பதாக புகார் கூறினார். இந்தப் புகாரை போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தபோது இதில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிந்தது. இதனையடுத்து போலீஸார் ராஜ் குந்த்ராவைக் கைது செய்தனர். ஆபாசப் படங்களை பிரிட்டனுக்கு அனுப்பி அங்கிருந்து ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியில் பதிவேற்றம் செய்ததும் புலன் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், தன் கணவர் ஆபாசப் படம் எடுக்கவில்லை வயது வந்தோருக்கான அடல்ட் கன்டன்ட் கொண்ட படங்களைத் தான் தயாரித்தார் என்று ஷில்பா ஷெட்டி வக்காலத்து வாங்கினார்.
இருப்பினும், ராஜ்குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக உள்ள நிலையில் அதிர்ச்சியடைந்துள்ள ஷில்பா ஷெட்டி, "ராஜ், நம்மிடம் எல்லாமே இருக்கிறது. எதற்காக இதைச் செய்தீர்கள். இதைச் செய்வதற்கான அவசியம் என்ன ராஜ்?"என்று ஆவேசத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது