Toll Tax in Highways: புதிய சுங்கச்சாவடி முறைக்கான விதிகளை பின்பற்றினால், 20 கி.மீ.க்கு வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய சுங்க வரி வசூல் முறை:


ஃபாஸ்டாக் தவிர, நாட்டில் மற்றொரு சுங்க வரி வசூல் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கவரியானது குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தின் கீழ் அரசாங்கத்தால் வசூலிக்கப்படும். இதற்காக 4 நெடுஞ்சாலைகளிலும் அரசு சோதனை நடத்தி சோதனைக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் ஆன்-போர்டு யூனிட்டிலிருந்து கட்டணம் வசூலிக்கும் முறை விரைவில் தொடங்கும். இதற்கான விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


ஜிஎன்எஸ்எஸ் முறை எப்படி செயல்படும்?


புதிய சுங்க வசூலிப்பு முறைக்கு ஜிபிஎஸ் பயன்படுத்தப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் தகவல் தொடர்பு அமைப்புகள் முதல் கூகுள் மேப்ஸ் போன்ற மொபைல் நேவிகேஷன் அப்ளிகேஷன் வரை அனைத்தும் இந்த அடிப்படையிலேயே செயல்படுகின்றன. குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (ஜிஎன்எஸ்எஸ்) வழிசெலுத்தல் மற்றும் நிலைப்படுத்தல் அளவீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது துல்லியமான தகவல்களை வழங்குகிறது. புதிய வசூல் முறையில் வாகன ஓட்டிகள், சுங்கச் சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.


”20கிமீ தூரத்திற்கு கட்டணம் இல்லை”


ஜிஎன்எஸ்எஸ்ஓபியு உள்ள வாகனங்களுக்கு சிறப்பு பாதை தயார் செய்யப்படும்.  அந்த பாதையில் மற்ற வாகனங்கள் வந்தால், இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஜிஎன்எஸ்எஸ்ஓபியு சாதனம் பொருத்தப்பட்ட தனியார் வாகனங்களின் உரிமையாளர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் தினசரி 20 கிலோமீட்டர் பயணத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ்ஸிலிருந்து கழிக்கப்படும் சுங்கவரி, தற்போதுள்ள முறையுடன் ஒப்பிடும்போது மலிவானதாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) திருத்த விதிகள், 2024 என அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் 20 கி.மீ.க்கு மேல் சென்றால் மட்டுமே வாகன உரிமையாளரிடம் மொத்த தூரத்திற்கு கட்டணம் விதிக்கப்படும். அப்படி விதிக்கப்படும் கட்டணத்தில், முதல் 20 கிமீ-க்கான கட்டணம், ஜிஎன்எஸ்எஸ்ஓபியு சாதனம் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு கழிக்கப்பட உள்ளது.  


சோதனை முயற்சி நடந்தது எங்கே?


ஃபாஸ்டேக்கை விட கூடுதல் வசதி கொண்ட,  ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான பயனர் கட்டண வசூல் அமைப்பின் கீழ், குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை சோதனை அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் ஜூலை மாதம் தெரிவித்தது. அதன்படி, கர்நாடகாவில் NH-275 இன் பெங்களூரு-மைசூர் பகுதியிலும், ஹரியானாவில் NH-709 இன் பானிபட்-ஹிசார் பகுதியிலும் GNSS-அடிப்படையிலான பயனர் கட்டண வசூல் முறை தொடர்பான சோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைதொடர்ந்து இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.