பெங்களூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தொடர்ச்சியாக தாமதமாக வருவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். 


இந்தியாவின் மிக முக்கியமான போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக ரயில்கள் உள்ளது. பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட், வந்தே பாரத், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், தேஜஸ் என பல வகைகளில், வெவ்வேறான கட்டணங்களில் பயணிகள் வசதிக்கேற்ப ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. குறைவான கட்டணம், பாதுகாப்பாக பயணம் என பல வகை காரணங்களால் பெரும்பாலும் மக்கள் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். 


இப்படியான நிலையில் சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு, சிக்னல் பிரச்சினை போன்ற நிகழ்வுகளால் ரயில்கள் தாமதமாவது வழக்கம். இது எல்லா நேரங்களிலும் நடக்காது. காரணம் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வரும் ரயில்வே துறை சரியான திட்டம், நேரம் அடிப்படையில் ரயில்களை இயக்கி வருகிறது. 


ஆனால் பெங்களூருவில் இருந்து கடந்த சில நாட்களாக சென்னையை நோக்கி வரும் ரயில்கள் தாமதமாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி பெங்களூரில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு கிளம்பிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு மேலான தாமதத்துடன் இரவு 12 மணியளவில் தான் சென்னை வந்தடைந்தது. 


இதனால் அதில் பயணித்த பயணிகள் கடும் சிரமப்பட்டனர். பெங்களூருவில் இருந்து சென்னை வருவதற்குள்ளான பல இடங்களில் சிக்னல் பிரச்சினை ஏற்பட்டதாக காரணம் கூறப்பட்டாலும் முறையாக காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பது பயணிகளின் ஆதங்கமாக இருந்தது. இந்நிலையில் நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை மற்றும் பெரம்பூர் வந்த ரயில்கள் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்துள்ளது.


மேலும் ரயில் கிளம்பும் நேரமும் பயணிக்கும் நேரமும் தொடர்ந்து தாமதமாகி வருவது பயணிகள் இடையே முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்னல் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்னையால் இத்தகைய தாமதம் கடந்த 4,5 நாட்களாக ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பு தெரிவித்தாலும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யக்கூடிய ஒரு போக்குவரத்து விஷயத்தில் ரயில்வே துறை இவ்வளவு மெத்தனமாக இருக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


அதேசமயம் இன்று காலை பெங்களூரில் இருந்து கிளம்பும் முதல் ரயிலான Kamakhya AC SF Express சற்று தாமதமாக கிளம்பினாலும் குறித்த நேரத்திற்குள் பயணித்துவிடும் என கூறப்பட்டுள்ளது.