பிற கோவில்கள் போல ஐயப்பன் கோவில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.
சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் நாளான கடந்த 17-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகளும், நெய் அபிஷேகமும் தொடங்கின. கேரளம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு இன்றோடு 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய நாள் ஒன்றுக்கு வந்து 80,000 பேர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த வாரம் முழுவதும் 50 ஆயிரம், 40 ஆயிரம், 30 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் காலை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். நடை அடைக்கப்பட்ட நேரங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் நடை திறக்கப்படும்போது ஒரே நேரத்தில் புறப்படுவதால், அந்த சமயத்தில் மட்டும் சிறிது கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், மற்ற நேரங்களில் சாதாரண அளவிலேயே கூட்டம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கமாக அதிக அளவில் காணப்படும். ஆனால் நேற்றும், இன்றும் கூட்டம் சற்று குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது