ரூ.6003.65 கோடி செலவில் தேசிய குவாண்டம் இயக்கத்தை செயல்படுத்தியதன் மூலம் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் 6 முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. அமெரிக்கா, ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பாக தனியே திட்டம் உருவாக்கி செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.


குவாண்டம் தொழில்நுட்பம்:


குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அது தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ‘தேசிய குவாண்டம் மிஷன்’ (என்க்யூஎம்) திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் தொழில்நுட்பமானது அணுக்கள் மற்றும் அடிப்படைத் துகள்களின் அளவில் இயற்கையை விவரிக்க 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.


குவாண்டம் தொழில்நுட்பத்தில் துடிப்புமிக்க, புதிய சூழலை உருவாக்குவதையும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி, மேம்பாட்டை அதிக ப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 2023-24-ல் இருந்து 2030-31 வரை ரூ.6003.65 கோடி செலவில் தேசிய குவாண்டம் இயக்கத்திற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. 


முன்னணி பெறும் இந்தியா:


குவாண்டம் தொழில்நுட்பமானது பாதுகாப்பான தகவல் தொடர்பு, பேரிடர் மேலாண்மை மூலம் சிறந்த முன்கணிப்பு, கணினி, உருவகப்படுத்துதல், வேதியியல், சுகாதாரம், குறியாக்கவியல், இமேஜிங் போன்றவற்றில் பயன்பாடுகள் மூலம் வெளிப்படுகிறது. வாசனை, உணர்வு, நொதி வினையூக்கம், ஒளிச்சேர்க்கை, ராபின் போன்ற பறவை வழிசெலுத்தல், உயிர்களின் தோற்றம் மற்றும் கொரோனா வைரஸின் விளைவுகள் போன்ற உயிரியல் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் குவாண்டம் கோட்பாட்டை விரிவுபடுத்தியுள்ளனர். 


இது குவாண்டம் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும்,  குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்கும். சூப்பர்கண்டக்டிங், போட்டோனிக் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தளங்களில் 8 ஆண்டுகளில் 50-1000 பிசிக்கல் க்யூபிட்ஸ் உடன் குவாண்டம் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதை இந்த இயக்கம் இலக்காக கொண்டுள்ளது.  


அணுசக்தி நடைமுறை:


இந்தியாவுக்குள் 2000 கி.மீ. தூரத்தில் உள்ள தரை நிலையங்களுக்கிடையே செயற்கைக்கோள் அடிப்படையிலான குவாண்டம் தகவல் தொடர்புகளை கிடைக்கச்செய்யும். இதர நாடுகளுடன் தொலைதூர குவாண்டம் தகவல் தொடர்புகளையும் 2000 கி.மீ. தூரம் வரை நகரங்களுக்கிடையேயான குவாண்டம் தகவல் பரிமாற்றத்தையும் இது கொண்டிருக்கும்.


அணுசக்தி நடைமுறைகளில் உயர்நிலை உணர்திறன் கொண்ட மேக்னோ மீட்டர்களை உருவாக்கவும்,  துல்லியமான நேரத்திற்கான அணுசக்தி கடிகாரங்களை உருவாக்கவும் இந்த இயக்கம் உதவிசெய்யும். சூப்பர்கண்டக்டர், நவீன செமி கண்டக்டர் வடிவங்கள் போன்ற குவாண்டம் பொருட்களை வடிவமைக்கவும் இது உதவியாக இருக்கும்.


குவாண்டம் தொழில்நுட்பங்கள் 4 டொமைன்கள் உள்ளன:


I. குவாண்டம் தகவல்தொடர்பு
Ii. குவாண்டம் சிமுலேஷன்
iii. குவாண்டம் கம்ப்யூட்டேஷன்
iv. குவாண்டம் சென்சிங் மற்றும் மெட்ரோலஜி


இந்நிலையில் குவாண்டம் தொழில்நுட்பத்தில் 6 முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. இது தொடர்பாக அறிவியல் தொழில்நுட்பத் துறை மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், தேசிய குவாண்டம் மிஷன் இந்தியாவை குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்சியில் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இத்திட்டத்தின் கீழ் குவாண்டம் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்யூனிகேஷன், குவாண்டம் சென்சிங் மற்றும் மெட்ராலஜி, குவாண்டம் மெட்டீரியல் மற்றும் டிவைசஸ் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.  சுகாதாரத் துறை முதல் பாதுகாப்புத் துறை, எரிசக்தி, டேட்டா செக்யூரிட்டி என நிறைய துறைகளில் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சி சிறந்த பலன்களை வழங்கும் என்றார்.