இலங்கை இன பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய - இலங்கை அரசுக்கிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இலங்கையில் உள்ள 9 மாகாண கவுன்சில்களுக்கு அதிகார பகிர்வு வழங்கும் வகையில், 13ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், சிங்கள அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக இன்று வரையில், அதை அமல்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பு, நேற்று முன்தினம், தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த தலைவர்களை சந்தித்து இதுகுறித்து பேசியிருந்தார். அப்போது, காவல்துறை அதிகாரம் வழங்காமல் 13ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்த விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், தமிழ் தேசிய கூட்டணி அதனை முற்றிலுமாக நிராகரித்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடன் சந்திப்பு, அதை தொடர்ந்து இலங்கை அதிபரின் இந்திய பயணம் என அடுத்தடுத்து முக்கியத்துவமான நகர்வுகள் அரங்கேறி வரும் நிலையில், 13ஆவது சட்டத் திருத்தத்திற்கு சிங்கள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? அப்படி அதில் என்ன கூறப்பட்டுள்ளது? அது தமிழர்களுக்கு எந்தளுக்கு முக்கியம் என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
13ஆவது சட்டத்திருத்தம் கூறுவது என்ன?
பல ஆண்டுகளாக நீடித்து வந்த இலங்கை இன பிரச்னை லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக அமைந்தது. கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில், இலங்கை ராணுவத்திற்கும், தனி நாடு கோரி போராடிய விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர், உலக நாடுகளை இலங்கையை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. இலங்கை பிரச்னை மோசமாவதற்கு முன்பே, அதற்கு தீர்வு காணும் வகையில், கடந்த 1987ஆம் ஆண்டு, ஜூலை மாதம், இந்திய - இலங்கை அரசுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த சமயத்தில், இந்திய பிரதமராக பதவி வகித்த ராஜீவ் காந்தி, இலங்கை அதிபராக பதவி வகித்த ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஆகியோருக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, மாகாண கவுன்சில்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் உள்பட நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க 13ஆவது சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.
கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நிலம், சட்டம் மற்றும் ஒழுங்கு (போலீஸ்) ஆகிய துறைகளில் மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், நிதி அதிகாரங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாலும் 13ஆவது சட்டத் திருத்தத்தை மட்டுப்படுத்தும் அளவிலான அதிகாரங்கள் அதிபருக்கு வழங்கப்பட்டதாலும் மாகாண கவுன்சில்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை.
குறிப்பாக, காவல்துறை மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்களில் மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவே இல்லை. ஆரம்பத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு வடக்கு-கிழக்கு மாகாண சபையைக் கொண்டிருந்தது.ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து 2007இல் இரண்டும் பிரிக்கப்பட்டன.
விடுதலை புலிகளே எதிர்த்த 13ஆவது சட்டத் திருத்தம்!
இலங்கையில் உள்நாட்டு போர் காலத்திலிருந்தே 13ஆவது சட்டத் திருத்தம் சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. சிங்கள தேசியவாதக் கட்சிகள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே இதை கடுமையாக எதிர்த்தன. இதன் மூலம், தமிழர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதாக சிங்கள தேசியவாத கட்சிகளும் குறைவான அதிகாரங்களே வழங்கப்படுவதாக விடுதலை புலிகள் அமைப்பும் எதிர்த்தன. இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடுவதாகக் கூறி, ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய இடதுசாரி தேசியவாத ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி) உட்பட சிங்கள அரசியலின் பெரும் பகுதியினர், இதை எதிர்த்தனர்.
இலங்கையின் வரலாற்றில் சக்திவாய்ந்த அதிபர்களில் ஒருவராக கருதப்படும் ஜெயவர்த்தனேவால் கையொப்பமிடப்பட்ட போதிலும், "அது தங்களின் செல்வாக்கை செலுத்தும் விதமாக இந்தியாவால் திணிக்கப்பட்ட தீர்வு" என சிங்கள அமைப்புகள் சில கருதுகின்றன. தமிழ் தேசிய உணர்வுகளை கொண்ட கட்சிகளோ, 13ஆவது சட்டத்திருத்தம் போதுமான அதிகாரங்களை தரவில்லை என குற்றஞ்சாட்டுகின்றன.
போருக்குப் பிந்தைய காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உட்பட சிலர், தமிழர்கள் அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியாகக் கருதுகின்றனர்.
13ஆவது சட்டத்திருத்தம் ஏன் முக்கியம்?
நீண்டகாலமாக நீடித்து வரும் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஒரே அரசியலமைப்பு ஏற்பாட்டாக 13ஆவது சட்டத்திருத்தம் இன்றுவரை கருதப்படுகிறது. கடந்த 1948ஆம் ஆண்டு, இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து 1980ஆம் ஆண்டில் இருந்து வளர்ந்து வரும் சிங்கள-பௌத்த பெரும்பான்மைவாதத்திற்கு மத்தியில் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு சில பலன்கள், 13ஆவது சட்டத்திருத்தத்தின் ஒரு பகுதியாகும்.
இலங்கை அதிபரின் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய பயணம்:
இலங்கை விவகாரத்தில் ராஜீவ் காந்திக்கு பிறகான காலத்தில் வந்த அரசுகள், பாஜக உள்பட, ஒரே நிலைபாட்டைதான் கொண்டிருக்கின்றன. அது 13ஆவது சட்டத்திருத்தை அமல்படுத்துவதற்கு அழுத்தம் தருவது. குறிப்பாக, மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டை குறிவைத்து வேலை பார்த்து வரும் பாஜக, இலங்கை தமிழர் விவகாரத்திற்கு முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் தருகிறது. அதற்கு சாட்சியாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தை கூறலாம்.
அதேபோல, இலங்கை அரசுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது, 13ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பேசியதாக அமெரிக்க தூதரக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இலங்கை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.