மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன. 


மணிப்பூர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை:


மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே வெடித்த மோதலை தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகும் கூட, அங்கு இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைளை  மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.  


குவியும் கணடங்கள்:


இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்.  பழங்குடியின பெண்களின் மீது நடத்தப்பட்ட கொடூரத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஸ்மிரிதி ராணி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். 


நாடாளுமன்ற கூட்டத்தொடர்:


இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மக்களவை மற்றும் மாநிலங்களவை காலையில் ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகலில் 2 மணியளவில் மீண்டும் தொடங்கப்பட்டன. 


நாடாளுமன்றத்தில் அமளி:


மாநிலங்களை கூடியதும் மணிப்பூர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக உடனே விவாதிக்க வேண்டும் என, எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அவைத்தலைவர் அதை நிராகரிக்கவே எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.


மணிப்பூர் பற்றி எரிகிறது..!


மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, "மணிப்பூர் அங்கு பற்றி எரிகிறது, பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர், ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்ரனர். ஆனால், பிரதமர் அமைதியாக இருக்கிறார். வெளியில் மட்டுமே அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்” என ஆவேசமாக பேசினார். தொடர்ந்து, எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, மக்களவையில் எதிர்கட்சிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்த அமளியில், அவை நடவடிக்கைகள் நாளை காலை 11 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.


மத்திய அரசு விளக்கம்:


மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிப்பது குறித்து பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மணிப்பூர் விவகாரம் ஒரு முக்கியமான பிரச்னை. விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் விரிவாகப் பதிலளிப்பார். விவாத தேதியை சபாநாயகர் முடிவு செய்யட்டும்” என மக்களவையில் தெரிவித்துள்ளார்.