Disease X  : கொரோனாவில் பிடியில் இருந்து தற்போது கொஞ்சகொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், தற்போது ஒரு பயங்கரமான ஆபத்து நம்மை நெருங்கவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் தெரிவித்துள்ளார்.


புரட்டிப்போட்ட கொரோனா தொற்று


கொரோனா பெருந்தொற்று சீனாவின்  ஊஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. இந்த கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கின.  லட்சக்கணக்கான மக்களை இந்த கொரோனா நோய் தொற்று பலி வாங்கியது. இந்தியாவில் 3 அலைகளாக மிரட்டிய கொரோனா தொற்றால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.


முதல்  அலை, 2-வது அலை, 3-வது அலை என பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும், அவ்வப்போது குரங்கு அம்மை, ஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் அச்சுறுத்தி வந்தன.


இந்நிலையில் தற்போது, கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் திரும்புள்ள நிலையில், கொரோனா தொற்றை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன?


சுவிட்சர்லாந்தில் உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ”கொரோனாவை  விட கொடிய நோய்க்கு உலகம் தயாராக வேண்டும். மற்றொரு நோய்க் கிருமியின் அச்சுறுத்தல் இன்னும் ஆபத்தான ஆற்றலுடன் வெளிவருகிறது. இந்த நோயால் அதிகமானோர் உயிரிழக்கக் கூடும்.


உலக நாடுகள் இதை புறந்தள்ளிவிட முடியாது. அடுத்த உலகளாவிய நோய் தொற்று வந்து கொண்டிருக்கிறது. எனவே அடுத்த தொற்று நோயைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய நேரம் இது. பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்பது முதன்மை  நோய்களை உலக சுகாதார அமைப்பு அடையாளம் கண்டுள்ளது” என்று தெரிவித்தார்.


இந்த நோய் தானா?


உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையை அடுத்து, அடுத்த நோய் தொற்று Disease 'X' என்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது  Disease 'X' ஆனது விலங்குகளிடம் பரவக்கூடிய தொற்று நோயாகும். இந்த Disease 'X'  ஆனது அடுத்து நோய் தொற்றாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். 


மேலும், இந்த Disease 'X' ஆனது உலக அளவில் பெரும் ஆபத்தை ஏறபடுத்தும். இது ஜாம்பி வைரஸாக கூட இருக்கலாம். ஏனென்றால் தற்போது ஏற்படும் காலநிலை மாற்றத்தில் ஜாம்பி வைரஸ் பரவக் கூடிய அபாயம் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையின்படி அடுத்த நோய் தொற்று Disease 'X' என்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.