கூலி, சமூகப் பாதுகாப்பு, தொழில் நிறுவனங்களுடனான உறவு, பணிப் பாதுகாப்பு, உடல்நலம், பணியிடச் சூழல் முதலானவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் நான்கு தொழிலாளர் சட்டங்களை அடுத்த ஆண்டு அமல்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்தச் சட்டங்களைப் பற்றி 13 மாநிலங்களில் வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், அடுத்த ஆண்டு முதல் இந்தியாவின் தொழிலாளர்கள் வாரத்திற்கு நான்கு நாள்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டால் போதும் என்ற நிலை உருவாக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 


எனினும் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் போது, தொழிலாளர்கள் பணியாற்றும் நான்கு நாள்களின் போது 12 மணி நேரங்கள் பணியாற்றும் சூழல் உருவாகும். மேலும், வாரத்திற்கு 48 மணி நேரங்கள் பணியாற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால் அதனைக் கடைப்பிடிக்கும் நோக்கத்தோடு பணியாற்றும் நேரம் அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 



மேலும், புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு, தொழிலாளர்களின் சம்பளம் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அதிகமாக அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 


நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் வரும் 2022-23 என்ற நிதியாண்டின் போது அமல்படுத்தப்படவுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களும் இந்தச் சட்டங்களின் இறுதி வடிவத்தை உருவாக்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம், மத்திய அரசு தரப்பிலும் தொழிலாளர் சட்டங்களின் வரைவின் இறுதிகட்டப் பணிகளை முடித்ததாகக் கூறப்படுகிறது. தொழிலாளர் நலன் என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால், மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒரே நேரத்தில் இந்தச் சட்டங்களை அமல்படுத்த விரும்புதாகக் கூறப்படுகிறது. 


மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சமீபத்தில் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், `பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணியாற்றும் சூழல் விதிமுறைகள் மட்டுமே 13 மாநிலங்களில் வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 



புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மத்திய அரசு ஏற்கனவே இறுதி செய்துள்ளது. மேலும், தொழிலாளர் நலன் என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால், தற்போது மாநிலங்களும் இதுகுறித்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


மத்திய அரசு புதிதாக நான்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கூலி விதிமுறைகள் 2019, தொழில் நிறுவன உறவு விதிமுறைகள் 2020, சமூகப் பாதுகாப்பு விதிமுறைகள் 2020, பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணியாற்றும் சூழல் விதிமுறைகள் 2020 ஆகிய விதிமுறைகள் சட்டங்களாக அமல்படுத்தப்படவுள்ளன. எனினும் மத்திய அரசு தரப்பிலும், மாநில அரசு தரப்பிலும் இந்த விதிமுறைகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டால் அதனை அதிகாரத்திற்குட்பட்ட அந்தந்த பகுதிகளில் அமல்படுத்த முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.