நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் இணையம் மூலம் ஒரு கோடி தேசியக் கொடிகளை விற்பனை செய்ய 10 நாட்கள் மட்டுமே எடுத்து கொண்டதாக  தபால் துறை ஆகஸ்ட் 12 அன்று தெரிவித்தது.


'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' திட்டத்தின் கீழ் நடைபெறும் அரசின் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தில் பங்கேற்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடியின் விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது.


தேசபற்றை பரப்புவதே இதன் நோக்கம் ஆகும். ஆனால் கொடியை ஏற்றுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் பல விதிகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இந்த விதிகள், இந்திய கொடி விதிகள், 2002 மற்றும் தேசிய நினைவு சின்ன அவமதிப்பு தடுக்கும் சட்டம், 1971இல் இடம்பெற்றுள்ளன.


தேசிய கொடியை யார் எல்லாம் ஏற்றலாம்? எந்த நாள்களில் ஏற்றலாம்?


ஜனவரி 26, 2002 முதல் நடைமுறைக்கு வந்த இந்தியக் கொடி விதிகளின்படி, எந்தவொரு நபரும், அமைப்பும், தனியார் அல்லது பொது, அல்லது கல்வி நிறுவனமும் (சாரணர் முகாம்கள் உட்பட) மூவர்ணக் கொடியை எல்லா நாட்களிலும் அல்லது சந்தர்ப்பங்களிலும் ஏற்றலாம். அல்லது காட்சிப்படுத்தலாம். தேசியக் கொடியின் கண்ணியம் மற்றும் மரியாதையை நிலைநாட்டும் வகையில் கொடி ஏற்றப்பட வேண்டும்.


தேசிய கொடியை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?


கொடியானது ஒருவர் விரும்பும் அளவுக்கு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளத்திற்கும் (அகலத்திற்கும்) உயரத்திற்கும் இடையிலான விகிதம் 3:2 ஆக இருக்க வேண்டும்.


எனவே, கொடியானது சதுரம் அல்லது வேறு எந்த வடிவத்திலும் இல்லாமல் செவ்வகமாக இருக்க வேண்டும். டிசம்பர் 30, 2021 அன்று மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, கொடியானது கையால் துருவிய மற்றும் கையால் நெய்த அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட, பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, பட்டு அல்லது காதியால் செய்யலாம். கொடியை திறந்த வெளியிலோ அல்லது பொதுமக்களின் வீட்டிலோ வைத்தால் இரவும் பகலும் கூட பறக்க விடலாம்.


சேதமான கொடியை ஏற்றலாமா?


சேதமடைந்த அல்லது சிதைந்த தேசியக் கொடியை ஏற்றுவது விதிகளுக்கு எதிரானது. எப்பொழுதும், தேசியக் கொடியானது மரியாதைக்குரிய நிலையில் காட்சிபடுத்தப்பட வேண்டும்.


தேசியக் கொடியை விட உயரமாகவோ அல்லது அதற்கு பக்கவாட்டிலோ வேறு எந்தக் கொடியையும் ஏற்றுக் கூடாது. பறக்கவிடப்படும் கொடியின் மீது அல்லது அதற்கு மேலே பூக்கள், மாலைகள், சின்னம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வைக்கக் கூடாது. மூவர்ணக் கொடியை அலங்கார நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தக்கூடாது. அது பறக்கும் கம்பத்தில் எந்த விளம்பரமும் வைக்கக் கூடாது.


தேசத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் மூவர்ணக் கொடியை அணிவது சரியா?


ஒரு நபர் தேசியக் கொடியை ஆடையாகவோ அல்லது சீருடையின் ஒரு பகுதியாகவோ பயன்படுத்துவதற்கு சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நபரின் இடுப்பிற்கு கீழே அணியும் பொருளாக அதைப் பயன்படுத்த கூடாது. தேசிய கொடியானது மெத்தைகள், கைக்குட்டைகள், ஆகியவற்றில் வடிவமைக்கவோ அல்லது அச்சிடப்படவோ கூடாது. 


சுதந்திர தினத்திற்குப் பிறகு மூவர்ணக் கொடியை என்ன செய்ய வேண்டும்?


மூவர்ணக் கொடியில் அழுக்குபடவோ அல்லது சேதப்படும் வகையிலோ சேமித்து வைக்கக் கூடாது. உங்கள் கொடி சேதமடைந்தால், அதை ஒதுக்கிவிடவோ அல்லது மரியாதைக் குறைவாக நடத்தவோ கூடாது. காகிதத்தால் ஆன கொடிகளை வைத்திருப்பவர்கள், விழா முடிந்ததும் இவற்றை தரையில் வீசக்கூடாது. கொடி தரையிலோ அல்லது தண்ணீரில் தடம் புரளவோ அனுமதிக்கப்படாது.


கொடியை அவமதித்தால் என்ன தண்டனை?


தேசிய நினைவு சின்ன அவமதிப்பு தடுப்பு சட்டம் 2ஆவது பிரிவின்படி, “எந்தவொரு பொது இடத்திலோ அல்லது பொது மக்கள் பார்வையிலோ வேறு எந்த இடத்திலோ தேசிய கொடியை எரிக்கவோ, சிதைக்கவோ, அசுத்தம் செய்யவோ, அழிக்கவோ, மிதிக்கவோ அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கவோ ( வார்த்தைகளால், பேசப்பட்டாலும், எழுதப்பட்டாலும், அல்லது செயல்களாலும்) கூடாது. அப்படி மீறினால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.