நாடாளுமன்ற மக்களவை தேர்தல், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்படி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


மேற்குவங்கத்தில் களைகட்டிய தேர்தல் பிரச்சாரம்:


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.


ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4 கட்டங்களாகவும் அஸ்ஸாம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் 2 கட்டங்களாகவும்,  தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.


ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் மம்தா:


மம்தா பானர்ஜியின் கோட்டையாக கருதப்படும் மேற்குவங்கத்தை குறிவைத்து பாஜக கடுமையாக வேலை செய்து வருகிறது. கடந்த முறை போன்று, இந்த முறையும் குறிப்பிடத்தகுந்த தொகுதிகளை கைப்பற்ற பாஜக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


ஆனால், பாஜகவின் வியூகத்தை சிதறடித்து கோட்டையை தக்க வைத்து கொள்ள மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஏழை, எளிய, தொழிலாளர்களின் வாக்குகளை குறிவைத்துள்ளார் மம்தா.


இந்த நிலையில், ஜல்பைகுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா, டீ மாஸ்டருடன் இணைந்து டீ போட்டு அசத்தியுள்ளார். கடைக்கு வருபவர்களுக்கு டீ போட்டு தந்துள்ளார். அதுமட்டும் இன்றி, பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.


 






இதையடுத்து, தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலையை பறித்தார். பழங்குடி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களுடன் நடனம் ஆடியபடி டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார். மம்தாவின் தேர்தல் பிரச்சார புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


கடந்த 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களை கைப்பற்றியது. பாஜக 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: TN CM Stalin Wishes: தேசத்துக்கான சேவையில், 33 ஆண்டுகள்.. மன்மோகன் சிங் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் புகழுரை..!