33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.


கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் வாயிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியற் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது.






உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு நீங்கள் மாறும்போது, இந்திய யூனியனுக்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பில் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


திமுக சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் ஞானம் மற்றும் தொலைநோக்கு மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்” என குறிப்பிட்டிருந்தார். 


33 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர்: 


கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அஸ்ஸாம் மாநிலத்திலும், 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநிலத்திலும் இருந்து எம்.பி.யாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடி, மன்மோகன் சிங்கை புகழ்ந்து பாராட்டி தள்ளினார். அப்போது பேசிய அவர், “சக்கர நாற்காலியில் வந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ள்ளார். உண்மையில் இது அனைவருக்கும் உத்வேகம் தரக்கூடிய ஒன்று. ஒரு தலைவராகவும், எதிர்க்கட்சி உறுப்பினராகவும் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு என்பது மிகச்சிறப்பானது. அது குறிப்பிட்ட சொல்லினால் அடங்காதவை. இந்திய ஜனநாயகத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செய்த பங்களிப்புக்காக அவர் என்றென்றும் நினைவுக்கூறப்படுவார்” என பேசினார். 


இந்தநிலையில்தான் 91 வயதாகும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதோடு, பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வும் பெறுகிறார். இதையடுத்து, மன்மோகன் சிங்கின் ராஜஸ்தானில் காலியாகும் இடத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அலங்கரிக்க இருக்கிறார்.  இதன் காரணமாக சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் செல்ல இருக்கிறார். மேலும் நேற்று 49 எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 5 பேர் ஓய்வு பெற இருக்கிறார்கள்.