இந்திராகாந்தியை போல மோடியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 


இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை பாஜகவே ஆட்சி செய்து வருகிறது. திட்டங்களை வகுப்பதில் அமித்ஷாவும் செயல்படுத்துவதில் மோடியும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்தில் எந்த மாதிரியான வியூகங்களை வகுத்து ஆட்சியை கைப்பற்றலாம் என்பதுதான் பாஜகவின் ஒரே இலக்காக இருக்க முடியும். 


அப்படியிருக்கையில் சிங்கப்பெண், இரும்பு பெண்மணி என்ற அடைமொழிகளுக்கு பெயர் போன மேற்கு வங்கு முதல்வர் மம்தா பானர்ஜி, மோடிக்கும் அமித்ஷாவுக்கு டஃப் ஃபைட் கொடுத்து வருகிறார். எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிப்பது போல எந்த வியூகத்தை வகுத்தாலும் மேற்கு வங்கத்தில் பாஜகவால் தாக்கு பிடிக்க முடியவில்லை. தன் கையை தன் கண்ணையே குத்துவது போல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மம்தாவின் வலது கையாகவும் இருந்த சுவேந்து அதிகாரியை பாஜக தன் வசம் இழுத்தது. அதுவும் அவர்களுக்கு பெரிதாக கைகொடுக்க வில்லை. அங்கு பாஜகவை தோற்கடித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைத்தது. 




இதைத்தொடர்ந்து ஆக்ரோஷமான மம்தா எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே கிடையாது என்பதுபோல் பொங்கி எழுந்து, டெல்லியை நோக்கி வீறு நடை போட்டுக்கொண்டு இருக்கிறார். சி.எம். மட்டுமல்ல. பி.எம் கூட ஆவேன்... என ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்க முதல் ஆளாய் புறப்பட்டார். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருக்கிறார் நம் இரும்பு பெண்மணி. ஆனால் தலைமை யார் என்ற சிக்கல் யாரை விட்டது. காங்கிரஸ்க்கும் மம்தாவுக்கும் கருத்து வேறுபாடு முற்ற ஆரமித்து விட்டது.  


ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத் பவார் தலைமை வகிப்பாரா என்ற கேள்விக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றால் என்ன? என்று கேட்டு அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தினார் மம்தா. மும்பை சென்ற மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா, அப்படீன்னா என்ன? ஐமுகூ இப்போது இல்லை. அரசியலில் தொடர்ச்சியாக செயல்படுவது அவசியம். தொடர்ந்து வெளிநாட்டில் இருந்தால் என்ன செய்ய முடியும். தொடர்ந்து போராடா அவர்கள் தயாராக இல்லை” என்று கடுமையாக விமர்சித்தார் மம்தா.


இதற்கு காங்கிரஸ் கட்சியும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது. மேற்கு வங்கம் மட்டும் இந்தியா இல்லை எனவும் ராகுலை விமர்சித்துவிட்டு எந்த ஒரு தனிக்கட்சியும் பாஜகவை எதிர்த்து போராட முடியாது எனவும் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்தார். 




இந்நிலையில், இந்திராகாந்தியை போல மோடியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, “இந்திராகாந்தி மிகவும் சக்திவாய்ந்த தலைவர். ஆனால் அவர் பிரகனப்படுத்திய எமெர்ஜென்சி மக்களை சென்றடைந்தது. 1977 ஆம் ஆண்டு இந்திரா மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரை மக்கள் மன்னிக்கவில்லை. நமது பிரதமர் தற்போது விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் பலனில்லை. மக்கள் அவரை மன்னிக்கமாட்டார்கள். 


எந்தவொரு விவாதமும் இல்லாமல் தற்போது வேளாண் சட்டங்களை பிரதமர் ரத்து செய்துள்ளார். ஏன் அவர் வேளாண் சட்டங்களை ரத்து செய்தார். ஏனென்றால் உத்தரப்பிரதேச தேர்தல்தான் காரணம். எல்லோருக்கும் அது தெரியும். பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். பயப்பட வேண்டாம். எல்லாம் சரியாகி விடும்” என்றார். 


”கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். இதனிடையே கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார். மேலும்  “வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு எனக் கருதுகிறேன். வேளாண் சட்ட விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேளாண் துறைக்குப் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்கக் குழுக்கள் அமைக்கப்படும். அக்குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் ஆகியோர் இடம்பெறுவர். விவசாயிகள் நலனுக்காகத் தொடர்ந்து உழைப்பேன்'' என்றார்.