West Bengal: மணிப்பூர் போன்று மேற்கு வங்க மாநிலத்திலும் அரை நிர்வாணமாக இரண்டு பெண்கள் அடித்து இழுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மணிப்பூர் கொடூரம்: 


மணிப்பூரில் குக்கி பழங்குடியின வகுப்பை சேர்ந்த பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டையே உலுக்கி வருகிறது. ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பழங்குடியின பெண்களில் ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் கொடூரம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி அமளியில் ஈடுபட்டதால் விவாதமின்றி இரண்டு நாட்களும் நாடாளுமன்றம் முடங்கியது. 


மேற்கு வங்கத்திலும்...


இந்நிலையில், மணிப்பூரை போல் மேற்கு வங்க மாநிலத்திலும் பெண்கள் 2 பேர் அரை நிர்வாணமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது சம்பந்தமான வீடியோக்களும் தற்போது வெளியாகி உள்ளன.


அதில், சம்பவ இடத்தில் இருந்த பெண்கள், இரண்டு பெண்களை பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். அவர்களை செருப்பால் அடித்தும், முடியைப் பிடித்து இழுத்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், ஏராளமானவர்கள் அவர்களை சுற்றியிருக்க, பெண்களின் ஆடைகளை கிழித்து அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 8ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் தக்சின் பஞ்ச்லா பகுதியில் உள்ளாட்சித் தேர்தலின்போது நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  


பாஜக கண்டனம்


மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து, அம்மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து மேற்கு வங்க பாஜக  தலைவர் சுகந்தா ஜும்தார் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மேற்கு வங்கத்தில் இரண்டு பழங்குடியின பெண்களை அரை நிர்வாணமாக்கி இரக்கமின்றி தாக்கி உள்ளனர். இந்த விஷயத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி வாய்மூடி மவுனம் காக்கிறார். இது முதல்வராக அவரது தோல்வியை எடுத்து காட்டுகிறது. எதிர்க் கட்சிகளின் கூட்டணி ஏன் இதற்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


உண்மை என்ன? 






 


திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு


இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான ஷஷி பஞ்சா கூறுகையில், ”இந்த  சம்பவத்தை பாஜக அரசியலாக்குகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு திருட்டு வழக்கு. இரண்டு பெண்களும் சந்தையில் திருட முயன்றனர். இதனால் அவர்களை ஒரு கும்பல் அடிக்கத் தொடங்கியது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.