Assam CM: அசாம் மாநிலத்தில் உள்ள மதராஸாக்களின் எண்ணிக்கை குறைக்கவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதரஸாக்கள்:
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மதரஸாக்களின் எண்ணிக்கையை குறைக்கவும், அந்த அமைப்பைப் பதிவு செய்யத் தொடங்கவும் அரசாங்கம் விரும்புவதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சனிக்கிழமை தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அசாம் முதல்வர், “முதல் கட்டமாக மாநிலத்தில் மதரஸாக்களின் எண்ணிக்கையை குறைக்க விரும்புகிறோம்” என்றார்.
"நாங்கள் மதரஸாக்களில் பொதுக் கல்வியை வைத்து, மதரஸாக்களில் பதிவு செய்யும் முறையைத் தொடங்க விரும்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார். சிறுபான்மை சமூகத்தினருடன் இணைந்து செயற்படுவதாகவும், அதற்கு அவர்களும் உதவுவதாகவும் அவர் கூறினார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில் கற்பிக்க அஸ்ஸாமுக்கு வெளியில் இருந்து வந்துள்ள அனைத்து ஆசிரியர்களும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் அவ்வப்போது ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படலாம் என்றும் அசாம் முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆலோசனை:
பயங்கரவாதக் குழுவான அன்சார்-உல்-பங்களா அல்லது அன்சருல்லா பங்களா டீம் (ABT) உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதரஸாக்கள் மீதான அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை (17/01/2023) , அஸ்ஸாமின் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) பாஸ்கர் ஜோதி மஹந்த், மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
திங்களன்று குவாஹாட்டியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அசாம் டிஜிபி, "அசாமில் மதரஸாக்கள் சரியாக இயங்குகின்றன. இன்று மதரஸாக்களை நடத்தும் 68 பேருடன் நாங்கள் கலந்து ஆலோசித்தோம்" எனக் கூறியுள்ளார்.