கடனைத் திருப்பிச் செலுத்தாத உரிமையாளர்களிடமிருந்து வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்து செல்வதற்காக ஆட்களை நியமித்து வைத்து, அவற்றை கைப்பற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் செய்யும் செயல் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக பாட்னா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


வலுக்கட்டாயமாக வண்டியை தூக்குபவர்கள்


நான் மகான் அல்ல திரைப்படத்தில் கார்த்தி இதே போன்றதொரு வேலையை செய்பவராக காட்டப்பட்டிருப்பார். அவர் செல்லும் இடத்தில் கடன் செலுத்த முடியாததன் காரணங்களை எல்லாம் கேட்டு மனமிறங்கி வண்டியை திரும்ப எடுக்காமல் வந்துவிடுவார். ஒரு வீட்டில் சென்று கிரிக்கெட் பார்த்துக்கொண்டு அமர்ந்து விடுவார். இது போன்ற வேலைக்காகவே வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ஆட்களை நியமிககும் வழக்கம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கடன் வாங்கும்போதே இரண்டு சாவிகளில் ஒரு சாவியை அவர்களே வைத்துக்கொள்வதால், கடன் தொகைக்கான மாதாந்திர பணத்தை கட்ட தவறுபவர்களுடைய வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்து வரும் வேலையை அவர்கள் செய்வார்கள்.



அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது


இந்த வழக்கம் குறித்து பேசிய நீதிபதி ராஜீவ் ரஞ்சன் பிரசாத், ஒட்டுமொத்தமாக ஒரு கொத்து ரிட் மனுக்களை தள்ளுபடி செய்தபோது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உரிமைகள் அரசியலமைப்பு வரம்புகளுக்குள்ளும் சட்டத்தின்படியும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட முடியாது. அதாவது சட்டத்தின் நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் எந்தவொரு நபரின் வாழ்வாதாரத்தையும் கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் பறிக்க முடியாது என்று பெஞ்ச் குறிப்பிட்டது. குண்டர்கள் மற்றும் பலமானவர்களை 'மீட்பு முகவர்கள்' என்று அழைக்கப்படுவதன் மூலம் இதுபோன்ற உடைமைகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தடை செய்கிறது என்று பெஞ்ச் தனது உத்தரவில் கூறியது.


தொடர்புடைய செய்திகள்: Crime: 30 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 8 ஆண்டுகள் நடந்த வழக்கு.. காம கொடூரனுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு.!


ஐம்பதாயிரம் அபராதம்


வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பத்திரப்பதிவு விதிகளின்படி அவர்களின் பாதுகாப்பு நலனை பேணி, வாகனக் கடன்கள் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியது. பீகாரில் உள்ள அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், எந்தவொரு மீட்பு முகவராலும் வாகனம் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்யப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. அதோடு இந்த தவறை செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பெஞ்ச் உத்தரவிட்டது.



பிறகெதற்கு சட்டம்


அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றாமல் வங்கிகள் நிதி நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக ஒரு நபரின் வாகனத்தை பறிமுதல் செய்து அவரது வாழ்வாதாரத்திற்கும், வாழும் உரிமைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலை செய்தால் பிறகு சட்டம் எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


வாகனத்தை திரும்பப் பெறுவதற்கான கடன் ஒப்பந்தத்தின் கீழ் பைனான்சியர் பெற்ற அதிகாரத்தின் போர்வையில், அவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் மே 19 அன்று உத்தரவிட்டது.