தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அமைந்துள்ளது வயநாடு. அந்த மாநிலத்தின் மிகவும் முக்கியமான சுற்றுலா தளம் மற்றும் நகரமாக இருப்பது வயநாடு. வயநாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.


வயநாடு நிலச்சரிவு:


வயநாட்டில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை மற்றும் முண்டகையில் திடீரென நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள், குடியிருப்புகள் கடுமையாக சேதம் அடைந்தன. விடாது பெய்த மழை, அதன் காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்துடன் இந்த நிலச்சரிவும் ஏற்பட்டதால் அந்த பகுதியே கோரத்தின் பிடியில் சிக்கியது.


முழுவதும் சிதைந்த அந்த பகுதியில் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று நள்ளிரவு வரையிலும் இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி காயம் அடைந்த 128 பேர் மீட்கப்பட்டு வயநாட்டைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 481 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


தொடரும் மீட்புபணி:


வயநாடு நிலச்சரிவின் துயரம் மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக மீட்பு பணியில் அந்த மாநில பேரிடர் குழுவினருடன் ராணுவம் மற்றும் விமானப்படையினரும் இணைந்தனர். தமிழ்நாடு அரசும் தங்களது மாநில பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பி வைத்துள்ளது. நேற்று காலை முதல் அங்கு பல இடங்களில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டு வருகின்றனர்.


பல நேரங்களில் தொடர்ந்து மோசமாக மழை பெய்ததால் ஹெலிகாப்டரால் மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை. முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள் முழுவுதும் உருக்குலைந்துள்ள நிலையில், நிலச்சரிவால் பல இடங்களில் பலரின் உடல்களும் மண்ணில் புதைந்துள்ளது. இது காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.


தற்காலிக மருத்துவமனை:


ஆறுகளில் பலரின் சடலங்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அட்டமலை மற்றும் மற்றொரு கிராமமும் இந்த நிலச்சரிவால் தொடர்பு இன்றி துண்டிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ஓடும் சாலியாற்றில் பலரது சடலங்களும் கரை ஒதுங்கி வருவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது, மீட்பு படையினர் நேற்று இரவு முழுவதும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் அடித்து வரப்பட்ட 31 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டது. 


போதிய வெளிச்சம் இன்றியும், மழை மற்றும் மோசமான வானிலை இருந்தும் அவர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர், இந்த கோர சம்பவத்தில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.