காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளையும் நாளை மறுநாளும் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 


பிரியங்கா காந்தி பிரச்சாரம்


224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளையும், நாளை மறுநாளும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.


அங்குள்ள தி.நரசிபுரத்தில் உள்ள கெலவரகண்டியில் நாளை (ஏப்ரல் 25) மதியம் 1 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகிறார். அதனை தொடர்ந்து சாமராஜநகர் மாவட்டம் ஹனூரில் உள்ள கவுரிசங்கர் கன்வென்ஷன் ஹாலில் மாலை 3 மணி முதல் மகளிர் மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். ராகுல் காந்தியும் 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும், காங்கிரசும்  செயல்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பாஜக நட்சத்திர தலைவர்களின் பிரச்சார பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது காங்கிரஸ் காட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள துவங்கியுள்ளனர். 


கர்நாடக சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமை நட்சத்திர தலைவர்களின் பிரச்சார பட்டியலை வெளியிட்டுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர்கள் யோகி ஆதித்தியநாத், சிவராஜ் சிங் செளகான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட  பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 


  பிரதமர் மோடி பிரச்சாரம்


முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைமை கேட்டு கொண்டுள்ளது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி தேதியான இன்று  (ஏப்ரல் 24ஆம் தேதி) தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார் மோடி.


கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி, மோடி, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். வரும் மே 8ஆம் தேதி வரை, அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார். பாஜக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மே 4ஆம் தேதி உடுப்பி வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி நகரில் பிரமாண்ட விழா நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. 


பிரதமர் மோடியின் பிரச்சாரம் கல்யாண-கர்நாடகா மற்றும் கிட்டூர்-கர்நாடகா பகுதிகளில் அதிகம் நடத்தப்பட உள்ளது. உள்ளூர் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக மோடி அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.