மணிப்பூர் விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரச்னைக்கு சுமூகமான தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அங்கு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை" என திட்டவட்டமாக கூறினார்.


டெல்லியில் நடந்த முக்கிய மீட்டிங்:


இந்நிலையில், மணிப்பூரில் நிலவி வரும் சூழல் குறித்து விளக்கம் அளிக்க, டெல்லிக்கு சென்ற அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங், அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். மாநில மற்றும் மத்திய அரசுகளால் வன்முறையை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்தது என பைரன் சிங் அமித் ஷாவிடம் கூறியுள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தது குறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட பைரன் சிங், "டெல்லியில் அமித்ஷா ஜியை சந்தித்து, மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கினேன். அமித் ஷாவின் தீவிர கண்காணிப்பின் கீழ், மாநில மற்றும் மத்திய அரசு கடந்த வாரத்தில் வன்முறையை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது" என பதிவிட்டுள்ளார்.


மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வா?


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஜூன் 13ஆம் தேதிக்குப் பிறகு வன்முறை காரணமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். அமைதியை அடைவதற்கான எங்கள் பணியை வலுப்படுத்துமாறு அமித் ஷா அறிவுறுத்தினார். 


மேலும், அமைதி நிலவுவதை உறுதிசெய்ய மணிப்பூரில் சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் கோரினார். என்னுடன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித்ஸ்வராஜ், ராஜ்யசபா எம்பி மகாராஜா மற்றும் சபாநாயகர் சத்யபிரதா சிங் ஆகியோர் வந்திருந்தனர்" என்றார்.


அனைத்து கட்சி கூட்டத்தில், 18 அரசியல் கட்சிகள், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நான்கு எம்.பி.க்கள் மற்றும் இரண்டு முதலமைச்சர்கள் மூன்று மணி நேரம் நீடித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலவி வரும் நிலைமையை முதல் நாள் முதலே பிரதமர் நரேந்திர மோடி கண்காணித்து வருவதாகவும், பிரச்னைக்கு தீர்வு காண முழு கவனமுடன் எங்களை வழிநடத்தி வருவதாகவும் அனைத்து கட்சி கூட்டத்தில் உள்துறை அமைச்சர் கூறினார்.


மணிப்பூர் வன்முறை:


மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ ஆறு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சதிச் செயல் ஏதேனும் நடந்திருக்கிறதா? என்பதை ஆராய சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து ஒரு மாதமாக நடந்து வரும் கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.


இதுவரை கலவரம் தொடர்பாக மொத்தம், 3,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.